வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் 9,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி


வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் 9,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 3:20 PM GMT (Updated: 3 May 2021 3:20 PM GMT)

வேலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ப.கார்த்திகேயன் 9,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேலூர், 

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. வேலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ப.கார்த்திகேயன், அ.தி.மு.க. சார்பில் எஸ்.ஆர்.கே.அப்பு, அ.ம.மு.க. சார்பில் தர்மலிங்கம், நாம் தமிழர் கட்சி சார்பில் பூங்குன்றம், மக்கள் நீதி மய்யம் சார்பில் விக்ரம் சக்கரவர்த்தி உள்பட 17 பேர் போட்டியிட்டனர். 364 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

வேலூர் தொகுதியில் 70.25 சதவீதம் வாக்குகள் பதிவானது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட். ஆகியவை வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

வாக்கு எண்ணிக்கை

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப்பட்டது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் 26 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் 4,522 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு 1,943 வாக்குகளும் பெற்றனர். முதல் சுற்றின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் 2,879 வாக்குகள் அ.தி.மு.க. வேட்பாளரை விட அதிகம் பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவிலும் தி.மு.க. வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.

தி.மு.க. வெற்றி

26 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் 9,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம் வருமாறு:-

ப.கார்த்திகேயன்

(தி.மு.க.) - 84,299

எஸ்.ஆர்.கே.அப்பு

(அ.தி.மு.க.) - 75,118

தர்மலிங்கம்

(அ.ம.மு.க.) - 865

பூங்குன்றம்

(நாம் தமிழர் கட்சி) - 8,530

விக்ரம் சக்கரவர்த்தி (மக்கள்

நீதி மய்யம்) - 7, 243

செந்தில்குமார் (சுயே) - 202

சையது ஜலாவுதீன்

(சுயே) - 187

நரேஷ்குமார் (சுயே) - 928

மனோகரன் (சுயே) - 67

கார்த்திக் (சுயே) - 36

ஆர்.கார்த்திகேயன் (சுயே) - 42

சதீஷ்குமார் (சுயே) - 54

சீனிவாசன் (சுயே) - 67

நசீர் (சுயே) - 91

பன்னீர்செல்வன் (சுயே)- 138

விஜயராஜ் (சுயே) - 224

விஷ்ணுமோகன்

(சுயே) - 367

செல்லாதவை - 324

நோட்டா - 1,441

டெபாசிட் இழப்பு

இதில் தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்களை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

Next Story