மாவட்ட செய்திகள்

காட்பாடி தொகுதியில் 746 வாக்கு வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி கடைசிவரை துரத்திய அதி.மு.க. வேட்பாளர் வி.ராமு + "||" + In Katpadi constituency By a margin of 746 votes Thuraimurugan wins

காட்பாடி தொகுதியில் 746 வாக்கு வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி கடைசிவரை துரத்திய அதி.மு.க. வேட்பாளர் வி.ராமு

காட்பாடி தொகுதியில் 746 வாக்கு வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி கடைசிவரை துரத்திய அதி.மு.க. வேட்பாளர் வி.ராமு
காட்பாடி தொகுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார். அவர், கடைசிசுற்றுவரை போராடி இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
காட்பாடி, 

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனும், அ.தி.மு.க சார்பில் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் வி.ராமு, நாம் தமிழர் கட்சி சார்பில் திருக்குமரன், அ.ம.மு.க. சார்பில் ஏ.எஸ்.ராஜா உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நேற்று வேலூர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

தேர்தல் பார்வையாளர் டாக்டர் சித்ரா, தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி ஆகியோர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டன. 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க வேண்டும். ஆனால் முகவர்கள் அதிகமாக இருந்ததால் அவர்களில் சிலரை வெளியே போக சொன்னார் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணிய கோட்டி. ஆனால் முகவர்கள் யாரும் வெளியே செல்லவில்லை. இதனால் வாக்கு எண்ணிக்கையில் 10 நிமிடம் தாமதமாக 8.40 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

5 எந்திரங்கள் பழுது

வாக்கு எண்ணும் போது முதல் சுற்றில் ஒரு எந்திரமும், 2-வது சுற்றில் இரண்டு எந்திரங்களும், பின்னர் 2 எந்திரங்களும் என 5 எந்திரங்கள் பழுதானது. இருந்தாலும் வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து அ.தி.மு.க வேட்பாளர் வி.ராமு முன்னிலை வகித்தார். தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்தார்.

9-வது சுற்றில் தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன், அ.தி.மு.க வேட்பாளர் ராமுவை விட 57 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். இதனால் வாக்கு எண்ணிக்கையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

18-வது சுற்றிலும் தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். பின்னர் மாறி மாறி இருவரும் முன்னிலை வகித்தனர். 25 சுற்றுகளின் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ராமு தி.மு.க. வேட்பாளர் துரைமுருகனை விட 346 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.

இரவில் தபால் ஓட்டு முடிவு

இந்த நிலையில் இரவு தபால் ஓட்டு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் 1,778 வாக்குகள் பெற்றிருந்தார். அ.தி.மு.க வேட்பாளர் ராமு 608 வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் நிலைமை தலைகீழாக மாறியது. முன்னிலையில் இருந்த ராமு பின்னுக்கு தள்ளப்பட்டார். இதில் 824 வாக்குகள் பெற்று துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

பழுதான 5 எந்திரங்களில் 4 வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. அதில் துரைமுருகனுக்கு ஏற்றங்கள், இறக்கங்கள் இருந்தாலும் கடைசியாக 746 வாக்குகள் பெற்று துரைமுருகன் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி அறிவித்தார்.

தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் 85 ஆயிரத்து 140 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ராமு 84,394 வாக்குகளும் பெற்றனர். அப்போது தி.மு.க தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் துரைமுருகனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார்.

வாக்கு விவரம்

வாக்குகள் விவரம்:-

பதிவான வாக்குகள்- 1,84,357

துரைமுருகன் (தி.மு.க.)- 85,140

வி.ராமு (அ.தி.மு.க)- 84,394

திருக்குமரன் (நாம்த மிழர் கட்சி)- 10,479

ஏ.எஸ்.ராஜா (அ.ம.மு.க.)- 1,040

சுதர்சன் (இந்திய ஜனநாயக கட்சி)- 1,006

கே.ராஜா (பகுஜன் சமாஜ் கட்சி)- 374

வி.விநாயகம் (சுயே)- 551

டி.ராமு (சுயே)- 332

ஆர்.பாஸ்கரன் (சுயே)- 224

ஆனந்தி (சுயே)- 193

தனஞ்செயன் (சுயே)-166

ஆர்.ராமன் (சுயே)-144

ஆறுமுகம் (இந்திய குடியரசு கட்சி) (அத்வாலே)-144

கே.ராமு (சுயே)-99

ஆர்.எஸ்.ஸ்ரீதர் (அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம்)-71