திருவையாறு தொகுதியில் துரை.சந்திரசேகரன் 5-வது முறையாக வெற்றி பா.ஜ.க. வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை 53 ஆயிரத்து 650 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்


திருவையாறு தொகுதியில் துரை.சந்திரசேகரன் 5-வது முறையாக வெற்றி பா.ஜ.க. வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை 53 ஆயிரத்து 650 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்
x
தினத்தந்தி 3 May 2021 3:43 PM GMT (Updated: 3 May 2021 3:43 PM GMT)

திருவையாறு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட துரை சந்திரசேகரன் 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை 53 ஆயிரத்து 650 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் ஒன்று திருவையாறு தொகுதி. இந்த தொகுதியில் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் துரை.சந்திரசேகரன் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க., ஐ.ஜே.கே., நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மொத்தம் 28 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க. வேட்பாளர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் இருந்து வந்தார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை விட 53 ஆயிரத்து 650 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

5-வது முறை வெற்றி

துரை.சந்திரசேகரன் 1989-ம் ஆண்டு முதல் முறையாக திருவையாறு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் நடிகர் சிவாஜி கணேசனை தோற்கடித்தார். அதன் பின்னர் 1996, 2006, 2016 சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1991 மற்றும் 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார். 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது அவர் 7-வது முறையாக போட்டியிட்டு 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

டெபாசிட் இழந்தனர்

தி.மு.க. வேட்பாளர் துரை.சந்திரசேகரனை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் மற்றும் அ.ம.மு.க. வேட்பாளர் வேலு.கார்த்திகேயன் ஆகியோரை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story