மதுரையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 16 பேர் பலி


மதுரையில் கொரோனாவுக்கு  ஒரே நாளில் 16 பேர் பலி
x
தினத்தந்தி 3 May 2021 4:58 PM GMT (Updated: 3 May 2021 4:58 PM GMT)

மதுரையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலியாகி உள்ளனர். எனவே மக்கள் அலட்சியம் காட்டாமல் விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

மதுரை,மே.
மதுரையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலியாகி உள்ளனர். எனவே மக்கள் அலட்சியம் காட்டாமல் விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனாவின் 2-ம் அலை தீவிரமாக உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிரிகத்து வருகிறது.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 16 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். அவர்கள் 54, 42, 68, 62, 51, 85, 55, 74, 80, 61, 85, 71, 83, 65, 44, 82 வயதுடையவர்கள் ஆவர். 
இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 540 ஆக அதிகரித்துள்ளது.
477 பேர்
மேலும் நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 350 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை 32 ஆயிரத்து 883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 
இதுபோல், நேற்று 507 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 27 ஆயிரத்து 899 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 444 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் இதுவரை ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததுதான் அதிக எண்ணிக்கையாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல், மிகவும் விழிப்புடன் இருந்து கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story