வானதி சீனிவாசன் வெற்றிக்கு கைகொடுத்த கெம்பட்டி காலனி ஓட்டுகள்


வானதி சீனிவாசன் வெற்றிக்கு கைகொடுத்த கெம்பட்டி காலனி ஓட்டுகள்
x
தினத்தந்தி 3 May 2021 5:20 PM GMT (Updated: 3 May 2021 5:20 PM GMT)

வானதி சீனிவாசன் வெற்றிக்கு கைகொடுத்த கெம்பட்டி காலனி ஓட்டுகள்

கோவை

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற கெம்பட்டிகாலனி உள்ளிட்ட பகுதி ஓட்டுகள் கைகொடுத்தன.

பிரபலமான தொகுதி

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். இதனால் அது பிரபலங்களின் தொகுதி பட்டியலில் சேர்ந்தது. அவரை எதிர்த்து பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார் உள்பட பலர் போட்டியிட்டனர்.

நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கையின் போது கமல்ஹாசன், வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவியது. மயூரா ஜெயக்குமாருக்கு கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக ஓட்டுகள் கிடைத்தன. இதனால் தொடக்கத்தில் முன்னிலை பெற்றார். இதையடுத்து அவர் பின்தங்கினார்.

வானதி சீனிவாசன் வெற்றி

முதலில் கமல்ஹாசன் முன்னிலை வகித்தார். அவரை தொடர்ந்து வானதிசீனிவாசன் வாக்குகள் பெற்று வந்தார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் கமல்ஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் நேரடியாக அமர்ந்து கவனித்து ஓட்டுகளை குறித்தனர்.

ஆனால் கடைசி 5 சுற்றுகளில் பலத்த போட்டி உருவானது. இதில், கெம்பட்டி காலனி, செட்டிவீதி, அசோக்நகர், ராம்நகர், சாய்பாபா காலனி, தியாகராஜபுதுவீதி ஆகிய பகுதிகளில் வானதி சீனிவாசனுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன. 

அதன்படி, வானதி சீனிவாசன் 22-வது சுற்றில் 43,451, 23-வது சுற்றில் 45,932, 24-வது சுற்றில் 48,270, 25-வது சுற்றில் 50,798, 26-வது சுற்றில் 52,627 ஓட்டுகள் பெற்றார்.

பா.ஜனதாவுக்கு ஒரு எம்.எல்.ஏ.

இது போல் கமல்ஹாசன் 22-வது சுற்றில் 43,627, 23-வது சுற்றில் 45,042, 24-வது சுற்றில் 47,156, 25-வது சுற்றில் 49,561, 26-வது சுற்றில் 51,087 என்று கொஞ்சம் கொஞ்சமாக பின்தங்கினர்.

கமல்ஹாசனுக்கு அனைத்து பகுதிகளிலும் பரவலாக ஓட்டுகள் பெற்ற நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக ஓட்டுகள் பெற்றதால் வானதி சீனிவாசன் 1,728 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இதன் மூலம் கோவை தெற்கு தொகுதியில் இருந்து பா.ஜனதாவுக்கு முதல் முறையாக ஒரு எம்.எல்.ஏ. கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story