மாவட்ட செய்திகள்

3 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது + "||" + DMK won 3 constituencies

3 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது

3 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது
விழுப்புரம், 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த 2016-ல் நடந்த சட்டசபை தேர்தலில் சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 2 தொகுதிகளில் தி.மு.க.வும், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க.வும் சரி சமமாக வெற்றி பெற்று தொகுதியை தங்கள் வசம் வைத்திருந்தன.
இந்நிலையில் 2021-ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதியன்று நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.
இதில் சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 2 தொகுதிகளில் ஆரம்பத்திலிருந்தே தி.மு.க. வேட்பாளர்களும், கள்ளக்குறிச்சி தொகுதியில் ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளரும் முன்னிலை பெற்று வந்தனர். உளுந்தூர்பேட்டை தொகுதியில் தொடக்கத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் முன்னிலையில் இருந்தார். பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை பெற்றார். இதனால் அந்த தொகுதியில் மட்டும் தி.மு.க.- அ.தி.மு.க. இடையே விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதன் முடிவில் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடினார்கள். அதாவது சங்கராபுரம் தொகுதியில் உதயசூரியன் எம்.எல்.ஏ., ரிஷிவந்தியம் தொகுதியில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உளுந்தூர்பேட்டை தொகுதியில் மணிகண்ணன் என 3 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் போட்டியிட்ட செந்தில்குமார் வெற்றி பெற்று தொகுதியை தன்வசப்படுத்தினார். 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக மாறியுள்ளது. இதனால் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.