1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற ஆம்புலன்ஸ்


1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற ஆம்புலன்ஸ்
x
தினத்தந்தி 3 May 2021 5:37 PM GMT (Updated: 3 May 2021 5:37 PM GMT)

நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டதால் 1 மணி நேரம் ஆம்புலன்ஸ் தாமதமாக புறப்பட்டு சென்றது.

நீடாமங்கலம்;
நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டதால் 1 மணி நேரம் ஆம்புலன்ஸ் தாமதமாக புறப்பட்டு சென்றது. 
ரெயில்வே கேட்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையம் அருகே தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில் கேட் உள்ளது. மக்கள் பயன்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் போக்குவரத்து நிறைந்த பகுதியில் இந்த ரெயில்வே கேட் உள்ளது. நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு ரெயில் வரும் போதும், நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு வேறு பகுதிக்கு செல்லும் போதும், சரக்கு ரெயில் போக்குவரத்தின் போது நீடாமங்கலம் ரெயில்வ கேட் அடைக்கப்படும். 
போக்குவரத்து நெருக்கடி
இதனால் தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் ரெயில்வே கேட்டின் இருபுறமும் அணிவகுத்து நிற்பது வழக்கம். கொரோனா காலத்துக்கு முன்பு ஒரு நாளில் நீடாமங்கலம் ரெயில்வே கேட் சுமார் 10 முைற மூடப்படுவதால் தினமும் சுமார் 7 மணி நேரம் தஞ்சை- நாகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள். 
ரெயில்வே மேம்பாலம்
 எனவே போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்  நீடாமங்கலத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நீடாமங்கலம் பகுதியில் ரெயில்வே  மேம்பாலம் அமைப்பதற்காக மண் ஆய்வு செய்யப்பட்டது. இதன்பின் நெடுஞ்சாலை துறையினர் ரெயில்வே மேம்பாலத்துக்கான வரைபடத்தை தயாரித்தனர். மத்தியஅரசும் ரெயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கியது. ஆனால் இது வரை ரெயில்வே மேம்பாலப்பணிகள் தொடங்கவில்லை. இதனால் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் இன்றும் தொடர்கிறது. 
நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ்
இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் என்ஜின் திசை மாற்றும் பணி நடைபெற்றது. இதற்காக ரயில்வேகேட் மூடப்பட்டது. அப்போது நாகையில் இருந்து தஞ்சை நோக்கி ஒலி எழுப்பியபடி ஒரு ஆம்புலன்ஸ் நோயாளியுடன் வந்தது. அப்போது நீடாமங்கலம் ெரயில்வே கேட் மூடப்பட்டு இருந்ததால் நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ரெயில்வே கேட் அருகே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சரக்கு ரயில் என்ஜின் மாற்றி புறப்பட்ட பின் இரவு 7.58 மணிக்கு ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. 
இதனால் சுமார் 1 மணி நேரம் நோயாளியுடன் காத்திருந்த ஆம்புலன்ஸ் தஞ்சை நோக்கி விரைந்து சென்றது. நோயாளிகளுடன் வரும் ஆம்புலன்ஸ் உள்பட பல வாகனங்கள் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குவதால் நீடாமங்கலத்தில் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவில் தொடங்கி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story