மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வார்டாக மாறும் வாக்கு எண்ணும் மையங்கள் + "||" + Ballot counting centers to become Corona wards

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வார்டாக மாறும் வாக்கு எண்ணும் மையங்கள்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வார்டாக மாறும் வாக்கு எண்ணும் மையங்கள்
வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் 1,000 படுக்கை வசதியுடன் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.
வேலூர்,

வேலூரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள கொரோனா வார்டுகள் நிரம்பி வருகின்றன. வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 1,000 படுக்கை வசதியுடன் சித்த மருத்துவ சிகிச்சை முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர குறைந்த பாதிப்பு கொண்ட நபர்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா பரவிய சூழ்நிலையில் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு, அங்கு கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டது. கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையமாக செயல்பட்டது. இதன் காரணமாக அங்கு கொரோனா சிகிச்சை முகாம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சிகிச்சை மையங்கள்

நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததையொட்டி உடனடியாக தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் 700 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று கலெக்டர் சண்முகசுந்தரம் தந்தை பெரியாா் பொறியியல் கல்லூரிக்கு சென்று கொரோனா சிகிச்சை மையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் 700 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா வார்டு அமைக்கப்படுகிறது. நாளை (இன்று) முதல் இது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதேபோல குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் 300 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்படுகிறது’ என்றார்.