நாமக்கல் மாவட்டத்தில் 128 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்


நாமக்கல் மாவட்டத்தில் 128 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்
x
தினத்தந்தி 3 May 2021 5:47 PM GMT (Updated: 3 May 2021 5:49 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தவிர 128 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 140 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோட்டில் நேற்று முன்தினம் நடந்தது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் 4 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றது. சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் மட்டுமே ஒரு வேட்பாளர் டெபாசிட் பெற முடியும். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் 12 பேரை தவிர, மீதமுள்ள 128 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

குமாரபாளையம், ராசிபுரம்

குமாரபாளையம் தொகுதியில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமைச்சர் தங்கமணி வெற்றி பெற்றார். இங்கு தி.மு.க. வேட்பாளர் வெங்கடாசலத்தை தவிர மீதமுள்ள 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
இதேபோல் ராசிபுரம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் மதிவேந்தன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சரோஜா தவிர மீதமுள்ள 13 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

நாமக்கல், திருச்செங்கோடு

நாமக்கல் தொகுதியில் மொத்தம் 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராமலிங்கம் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தவிர 24 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். திருச்செங்கோடு தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ. தவிர 26 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

சந்திரசேகரன் டெபாசிட் இழப்பு

இதேபோல் சேந்தமங்கலம் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பொன்னுசாமி வெற்றி பெற்றார். இங்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தி காரணமாக சுயேச்சையாக போட்டியிட்ட சந்திரசேகரன்  உள்பட 13 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

பரமத்திவேலூர் தொகுதியில் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சேகர் வெற்றிபெற்றார். இங்கு இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. தவிர 25 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். மொத்தம் 128 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story