நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தைப் பெற்றனர்


நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தைப் பெற்றனர்
x
தினத்தந்தி 3 May 2021 5:57 PM GMT (Updated: 3 May 2021 5:57 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தைப் பெற்றனர். அ.ம.மு.க. சரிவை சந்தித்துள்ளது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தைப் பெற்றனர். அ.ம.மு.க.  சரிவை சந்தித்துள்ளது.
தி.மு.க.வுக்கு 3 தொகுதி
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிவு நேற்று முன்தினம் வெளியானது. 5 தொகுதிகளை அ.தி.மு.க.வும், 3 தொகுதிகளை தி.மு.க.வும் கைப்பற்றியது. கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வசம் இருந்த தாராபுரம் தொகுதியை இந்த முறை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. வசம் இருந்தது. இந்த முறை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. அதுபோல் காங்கேயம் தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை வசம் இருந்தது. இந்த முறை தி.மு.க. காங்கேயத்தை கைப்பற்றியிருக்கிறது.
அ.தி.மு.க.-தி.மு.க.
தேர்தல் முடிவில் அ.தி.மு.க.- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையே மட்டுமே போட்டி நிலவியது. மற்ற வேட்பாளர்கள் அந்த அளவுக்கு வாக்குகளைப் பெறவில்லை. இருப்பினும் நாம் தமிழர் கட்சி வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளை பெற்று இருக்கிறார்கள்.
தே.மு.தி.க.
அதன்படி தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரஞ்சிதா 6,753 வாக்குகள் பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சார்லி 2,130 வாக்குகள் பெற்றுள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர் கலாராணி 1,172 வாக்குகளை பெற்றிருக்கிறார்.
அவினாசி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷோபா 13,256 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் வெங்கடேஸ்வரன் 8,379 வாக்குகள் பெற்றனர். தே.மு.தி.க. வேட்பாளர் மீரா, 2,577 வாக்குகளை பெற்றிருக்கிறார்.
பல்லடம்
காங்கேயம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவானந்தம் 11,307 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். பல்லடம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுப்பிரமணியம் 20,524 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி 10,227 வாக்குகள், அ.ம.மு.க. வேட்பாளர் ஜோதிமணி 2,618 வாக்குகளை பெற்றுள்ளார்.
திருப்பூர் வடக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஈஸ்வரன் 23 ஆயிரத்து 110 வாக்குகள் பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சிவபாலன் 19,602 வாக்குகள் பெற்றார். தே.மு.தி.க. வேட்பாளர் செல்வகுமார் 3,427 வாக்குகளை பெற்றிருக்கிறார்.
மடத்துக்குளத்தில் அதிகம்
திருப்பூர் தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகசுந்தரம் 12,898 வாக்குகள் பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அனுஷா ரவி 9,934 வாக்குகளை பெற்றார். அ.ம.மு.க. வேட்பாளர் விசாலாட்சி 1, 757 வாக்குகளை பெற்றிருக்கிறார்.
மடத்துக்குளம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சனுஜா 6,245 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் சண்முகவேலு 6,515 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் மட்டுமே மூன்றாவது இடத்தை அ.ம.மு.க. பெற்றிருந்தது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குமரேசன் 2,894 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி
உடுமலை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாபு ராஜேந்திர பிரசாத் 8,592 வாக்குகள் பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீநிதி 8,163 வாக்குகள் பெற்றார். அ.ம.மு.க. வேட்பாளர் பழனிசாமி 1,043 வாக்குகளை பெற்று இருந்தார்.
8 சட்டமன்ற தொகுதிகள் மடத்துக்குளம் தவிர 7 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
அ.ம.மு.க. சரிவு
அ.ம.மு.க. வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளை பிரிப்பார்கள் அ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு பாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் விட அ.ம.மு.க. வேட்பாளர்கள் குறைவான வாக்குகளை பெற்று இருக்கிறார்கள். அ.ம.மு.க. சரிவை சந்தித்து இருக்கிறது. அதுபோல் தே.மு.தி.க. வேட்பாளர்களும் எதிர்பார்த்ததை விட குறைவான வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Next Story