சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து 22 நாட்கள் ஆகியும் சிக்கவில்லை


சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து 22 நாட்கள் ஆகியும் சிக்கவில்லை
x
தினத்தந்தி 3 May 2021 5:59 PM GMT (Updated: 3 May 2021 5:59 PM GMT)

வால்பாறையில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து 22 நாட்கள் ஆகியும் சிக்காததால் வேறு இடத்தில் மாற்றி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வால்பாறை

வால்பாறையில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து 22 நாட்கள் ஆகியும் சிக்காததால் வேறு இடத்தில் மாற்றி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

சிறுத்தையை பிடிக்க கூண்டு 

வால்பாறை வாழைத்தோட்டம்  குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
எனவே சிறுத்தை, ஊருக்குள் வரக்கூடிய இடங்களை கண்டறிந்து நல்லகாத்து எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் ஒரு கூண்டு, அதற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகில் ஒரு கூண்டு என 2 கூண்டுகள் வைக்கப்பட்டன. 

22 நாட்கள் ஆகியும் சிக்கவில்லை

இந்த கூண்டுகள் வைக்கப்பட்டு 22 நாட்கள் ஆகியும் சிறுத்தை சிக்கவில்லை. இதனால் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண் காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது கூண்டு அருகில் சிறுத்தை நடந்து செல்வது பதிவாகி இருந்தது. 

கூண்டு அருகில் சிறுத்தை சென்றபோதும் அது கூண்டுக்குள் சிக்கவில்லை என்பதால் வனத்துறையினர் மற்றும் பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

எனவே கூண்டு களை மாற்றி வேறு பகுதியில் வைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- 

மாற்றி வைக்க வேண்டும் 

தற்போது கூண்டு வைத்து இருக்கும் இடம் சாலை அருகே ஆகும். இந்த வழியாக வாகனங்கள் சென்று கொண்டு இருக்கும் என்பதால் சிறுத்தை அதன் அருகில் வந்தாலும் கூண்டில் சிக்குவது இல்லை. மாறாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நடமாடி வருகிறது. 

எனவே தேயிலை தோட்ட பகுதியை ஒட்டி உள்ள நடுமலை எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பிரிவு பகுதியில் கூண்டுகளை மாற்றி வைத்தால் சிறுத்தை சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதை செய்ய வனத்துறையினர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story