நடைபாதை பகுதி மீண்டும் ஆக்கிரமிப்பு


நடைபாதை பகுதி மீண்டும் ஆக்கிரமிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 7:13 PM GMT (Updated: 3 May 2021 7:13 PM GMT)

சிவகாசி நகராட்சியின் அண்ணாகாய்கறி மார்க்கெட்டில் நடை பாதையை வியாபாரிகள் சிலர் ஆக்கிரமித்து தற்காலிக கடை அமைத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி, 
சிவகாசி நகராட்சியின் அண்ணாகாய்கறி மார்க்கெட்டில் நடை பாதையை வியாபாரிகள் சிலர் ஆக்கிரமித்து தற்காலிக கடை அமைத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
காய்கறி மார்க்கெட்
சிவகாசி நகராட்சிக்கு சொந்தமான அண்ணா காய்கறி மார்க்கெட்டில் 140 கடைகள் உள்ளன. இந்த கடைகளை வாடகைக்கு எடுத்துள்ள வியாபாரிகள் வெளியூர்களில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்கள். 
கடந்த ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் மார்க்கெட்டுக்கு அதிக அளவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூடுகிறார்கள் என்ற காரணத்தை கூறி மாவட்ட நிர்வாகம் 7 மாதங்கள் மார்க்கெட்டை தற்காலிகமாக பூட்டி விட்டது. 
பின்னர் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மார்க்கெட் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
ஆக்கிரமிப்பு
அப்போது சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் அண்ணா காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்து உரிய அனுமதி பெற்று கடைகள் நடத்தும் வியாபாரிகள் மட்டும் இங்கு காய்கறி விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 
அனுமதியின்றி நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதை தொடர்ந்து 140 வியாபாரிகள் மட்டும் காய்கறி மார்க்கெட்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் மட்டும் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர். 
இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் எவ்வித போக்குவரத்து பாதிப்பும் இன்றி மார்க்கெட்டிற்குள் வந்து சென்றனர்.
மீண்டும் ஆக்கிரமிப்பு
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக நகராட்சி அதிகாரிகள் வரிவசூல் மற்றும் தேர்தல் பணியில் தீவிரமாக இருந்ததால் நகராட்சி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது. தற்போது மார்க்கெட்டின் உள்ளே நடந்து செல்ல முடியாத அளவுக்கு தள்ளுவண்டி வியாபாரிகள் அதிக அளவில் உள்ளனர். 
இதனால் மார்க்கெட்டின் உள்ளே பொதுமக்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே களைய வேண்டும். அப்படி இல்லை என்றால் மார்க்கெட் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்ய வாய்ப்பு ஏற்படும். உரிய வாடகை செலுத்தி கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளும் தங்கள் கடைகளை திரும்ப ஒப்படைத்துவிட்டு நடைபாதையில் கடைகளை தொடங்க முன்வருவார்கள். இதனால் நகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும். 
எனவே இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அனுமதிக்காமல் உடனே அகற்ற தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story