விருதுநகர் பஸ், ெரயில் நிலையங்களில் பாதிப்பு ஏற்படும் நிலை


விருதுநகர் பஸ், ெரயில் நிலையங்களில் பாதிப்பு ஏற்படும் நிலை
x
தினத்தந்தி 3 May 2021 7:21 PM GMT (Updated: 3 May 2021 7:21 PM GMT)

சிறுமழைக்கு கூட விருதுநகர் பஸ், ரெயில் நிலையங்களில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மழைநீர் வடிகால் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 
சிறுமழைக்கு கூட விருதுநகர் பஸ், ரெயில் நிலையங்களில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மழைநீர் வடிகால் அமைக்க நகராட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 
நிதி ஒதுக்கீடு 
 விருதுநகர் பகுதியில் சிறு மழையிலும் கூட பிரதான சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது.
 இதற்கு காரணம் உரிய முறையில் மழைநீர் வடிகால் அமைக்கப்படாததால் தான் கடந்த காலங்களில் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தை சுற்றி மழை பெய்யும் பொழுது மழைநீர் பஸ்நிலையத்திற்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் மாவட்ட கலெக்டராக வெங்கட்ரமணன் இருந்தபோது பழைய பஸ் நிலையத்தை சுற்றி முறையான மழைநீர் வடிகால் அமைப்பதற்காக ரூ.25 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தந்தார்.
மழைநீர் வடிகால் 
 ஆனால் நகராட்சி நிர்வாகம் இந்த நிதியைக்கொண்டு பஸ் நிலையத்தை சுற்றி முறையாக மழைநீர் வடிகால் அமைக்காததால் தொடர்ந்து மழை பெய்யும் போதெல்லாம் பஸ்நிலையத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
 இந்தநிலையில் நகராட்சி நூற்றாண்டு நிதியாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் பழைய பஸ் நிலையம் ரூ. 1கோடி மதிப்பீட்டில் மேம்பாடு அடைந்தது. ஆனாலும் பஸ் நிலையத்தை சுற்றி மழைநீர் வடிகால் அமைப்பதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வில்லை.
போக்குவரத்து பாதிப்பு 
 இதனால் தற்போது கூட மழை பெய்தால் பஸ்நிலையத்தை சுற்றி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும். வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதோடு பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
 ஆனால் நகராட்சி நிர்வாகம் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மேலும் ஏற்கனவே இருக்கும் கழிவுநீர்கால்வாய்களில் இருந்தும் கழிவுநீர் மழை நேரங்களில் வெளியேறி சாலைகளில் ஓடும் நிலை உள்ளது. கழிவுநீர்கால்வாய்களை அவ்வப்போது சுத்தப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.
 ெரயில் நிலையம் 
இந்நிலையில் ெரயில் நிலையத்திற்கு செல்லும் ெரயில்வே பீடர்சாலையில் நுழைந்தவுடனேயே தந்திமர தெரு சந்திப்பில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ெரயில் நிலைய நுழைவுவாயிலில் மழைநீர் தேங்கி நிற்பதால் ெரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.  இந்த நடைமுறை தொடர்ந்து நீடித்து வருகிறது.  பொதுவாக விருதுநகரில் சிறு மழை பெய்தாலே மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படாததால் மழை நீரோடு கலந்து கழிவுநீரும் பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் ஓடும் நிலை தொடருகிறது.
நோய் பரவல் 
 இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.  எனவே நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை திட்டம் ஒரு புறம் முடிவடையாத நிலையிலும், மழைநீர் செல்வதற்கு உரிய வடிகால் அமைப்பதோடு கழிவுநீர் கால்வாய்களை அவ்வப்போது தூர்வாரி மழை காலங்களில் கழிவுநீர் வெளியேறாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காலத்தில் கழிவுநீரால் மேலும் நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.

Next Story