பேப்பர் கட்டுகள் மீது ரூபாய் நோட்டுகளை ஒட்டி நூதன மோசடிக்கு முயற்சி


பேப்பர் கட்டுகள் மீது ரூபாய் நோட்டுகளை ஒட்டி நூதன மோசடிக்கு முயற்சி
x
தினத்தந்தி 3 May 2021 7:44 PM GMT (Updated: 3 May 2021 7:44 PM GMT)

மார்த்தாண்டத்தில் ஹவாலா பணத்தை மாற்றினால் பல லட்சம் ரூபாய் கமிஷன் தருவதாக கூறி பேப்பர் கட்டுகளின் மேல் ரூபாய் நோட்டுகளை ஒட்டி நூதன மோசடிக்கு முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் ஹவாலா பணத்தை மாற்றினால் பல லட்சம் ரூபாய் கமிஷன் தருவதாக கூறி பேப்பர் கட்டுகளின் மேல் ரூபாய் நோட்டுகளை ஒட்டி நூதன மோசடிக்கு முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

பல லட்சம் ரூபாய் கமிஷன் 

மார்த்தாண்டம் அருகே கஞ்சிகுழி பகுதியை சேர்ந்தவர் ஜெபமணி (வயது 65). இவரிடம் ஒரு கும்பல் சென்று தங்களிடம் பல கோடி ஹவாலா பணம் இருப்பதாகவும், அவற்றை மாற்றி தந்தால் பல லட்சம் ரூபாய் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினர். அத்துடன் தங்களுக்கு முன்பணமாக ரூ.18 லட்சம் கொடுத்தால் அதற்கான ஹவாலா பணத்தை தருவதாக கூறினர்.  
இதை நம்பிய ஜெபமணி தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அவர்களிடம் ரூ.18 லட்சம் கொடுத்துள்ளார். இதற்கான ஹவாலா பணத்தை தருவதாக அந்த கும்பல் கூறிவிட்டு சென்றது. ஆனால், கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை.
இந்தநிலையில், அந்த கும்பல் மீண்டும் ஜெபமணியை தொடர்பு கொண்டு ரூ.40 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி தருவதாக கூறினர். 

போலீசில் புகார்

இதையடுத்து அந்த கும்பலை கையும் களவுமாக பிடிக்க நினைத்த ஜெபமணி மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அந்த கும்பலை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வர கூறும்படி  ஜெபமணியிடம் கூறி அனுப்பினர். அதன்படி அந்த கும்பலை சிராயன்குழி பகுதிக்கு வருமாறு ஜெபமணி கூறினார். 
அத்துடன் அந்த பகுதியில் மாத்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார், தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், ஏட்டு ராஜமணி மற்றும் போலீசார் மாறு வேடத்தில் பதுங்கி  இருந்தனர்.
சிறிது நேரத்தில் அந்த கும்பல் ஒரு வாகனத்தில் வந்தனர். அவர்களது கையில் ஒரு பை இருந்தது. அதில் ரூ.1 கோடி உள்ளதாக கூறி விட்டு ஜெபமணியிடம் ரூ.40 லட்சம் பணம் தருமாறு கூறினார். 

2 பேர் கைது

இவர்கள் பேசி கொண்டிருந்த போது அங்கு மறைவாக இருந்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்தது. போலீசாரை கண்டதும் கும்பலில் இருந்த 4 பேர் தப்பி  ஓடினர். 2 பேர் சிக்கி கொண்டனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் குழித்துறை பாளையங்கெட்டியை சேர்ந்த மணிகண்டன் (43), சிதறாலை சேர்ந்த ஜாண் (38) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து  அவர்களிடம் இருந்த பையை திறந்து பார்த்த போது பேப்பர் கட்டில் ரூபாய் நோட்டை ஒட்டி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்த பேப்பர் கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து பிடிபட்ட 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story