கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்


கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்
x
தினத்தந்தி 3 May 2021 7:48 PM GMT (Updated: 3 May 2021 7:48 PM GMT)

ராஜாக்கமங்கலம் அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபரை கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் ேபாலீசார் தேடி வருகிறார்.

ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபரை கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில்போலீசார் தேடி வருகிறார்.

உண்டியல் கொள்ளை

ராஜாக்கமங்கலம் அருகே பருத்திவிளையை அடுத்த புல்லுவிளையில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. 
சம்பவத்தன்று இரவு வழக்கமான பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் கோவிலுக்கு சென்ற ஒருவர் மூலஸ்தான கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். நிர்வாகிகள் விரைந்து வந்து பார்த்த போது கோவிலில் இருந்த உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

கண்காணிப்பு கேமரா காட்சி

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலையில் ஒரு நபர் கோவிலுக்குள் நுழைவதும், அவர் உண்டியலை உடைக்க முயற்சி செய்வதும், முடியாததால் அதை தூக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே வைராகுடியிருப்பில் உள்ள அம்மன் கோவில் பின்புறம் உள்ள தோப்பில் ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதாக அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், உடைந்த உண்டியல் அருகே அரிவாள் போன்ற ஆயுதங்கள் கிடந்தன. 

மர்ம நபருக்கு வலைவீச்சு

இதனால், சிவன் கோவிலில் இருந்து உண்டியலை தூக்கிசென்ற நபர் அதை அம்மன் கோவிலின் பின்பகுதிக்கு எடுத்து சென்று அம்மன் கோவிலில் இருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். கோவிலில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story