காரைக்குடி புறநகர் பகுதிகளை குறி வைக்கும் திருட்டு கும்பல்


காரைக்குடி புறநகர் பகுதிகளை குறி வைக்கும் திருட்டு கும்பல்
x
தினத்தந்தி 3 May 2021 8:27 PM GMT (Updated: 3 May 2021 8:27 PM GMT)

காரைக்குடி நகரில் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால் புறநகர் பகுதிகளை திருட்டு கும்பல் குறி வைக்கின்றன. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்து உள்ளது.

காரைக்குடி,
காரைக்குடி நகரில் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால் புறநகர் பகுதிகளை திருட்டு கும்பல் குறி வைக்கின்றன. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்து உள்ளது.

தொடர் திருட்டு அதிகரிப்பு

காரைக்குடி நகரின் வட பகுதியில் கழனிவாசலிருந்து திருச்சி புறவழிச் சாலைக்கு செல்லும் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவான வி.ஏ.ஓ. காலனி, அரசு டிரைவர்கள் காலனி பகுதியில் சுமார் 100 வீடுகள் உள்ளன..ஒவ்வொரு வீட்டிலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் 70 வயதை கடந்தவர்கள் வசிக்கின்றனர். அதேபோல் அரசு போக்குவரத்துக்கழக நகரில் 200 வீடுகள் உள்ளன.
என்.ஜி.ஓ. காலனி, தனியார் குடியிருப்புகள், பள்ளிகள், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, விளையாட்டுத்திடல், கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகள் மற்றும் அரசு பணியாளர்கள் அதிகம் வாழும் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் தொடர்கின்றன. சங்கிலி பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் தினமும் அச்சத்துடன் உள்ளனர்.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக பொருத்த வேண்டும்.
மேலும் இரவு நேரங்களில் விளையாட்டுத்திடல், பூங்காக்களில் சமூக விரோத செயல்கள் நடந்த வண்ணம் உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இப்பகுதிக்கான போலீஸ் நிலையம் 8 கிலோமீட்டர்தொலைவில் உள்ளது.
கைவரிசை
இதனால் தகவலறிந்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக பிடிக்க இயலவில்லை. நகர்ப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உடனடியாக போலீசாரிடம் சிக்கிக் கொள்கின்றனர். எனவே குற்றநோக்கம் உடையவர்கள் நகர் பகுதிகளை விட்டு புறநகர் பகுதிகளில் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டனர்.

ரோந்து பணி

எனவே காரைக்குடி உட்கோட்ட காவல்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதோடு இப் பகுதியில் புறக்காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் அதுவரை ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story