கோவையில் நேற்று ஒரேநாளில் 1,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கோவையில் நேற்று ஒரேநாளில் 1,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 3 May 2021 9:12 PM GMT (Updated: 3 May 2021 9:12 PM GMT)

கோவையில் நேற்று ஒரேநாளில் 1,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவை

கோவையில் தொடர்ந்து வேகமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 1,566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

புதிய உச்சம்

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக கோவையில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 689 ஆக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 44 வயது ஆண், 51 வயது ஆண், 72 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 729 ஆக உயர்ந்து உள்ளது.

1,063 பேர் குணமடைந்தனர்

கோவை அரசு மற்றும் தனியார், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகி ச்சை பெற்று வந்த 1,063 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 8,188 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 73 ஆயிரத்து 772 பேர் குணமடைந்து உள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் போதிய தடுப்பூசி இல்லாததால் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. 

கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மையங்களில் நேற்று ஒரே நாளில் 4,662 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 176 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Next Story