மொடக்குறிச்சி அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு


மொடக்குறிச்சி அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 3 May 2021 9:43 PM GMT (Updated: 3 May 2021 9:43 PM GMT)

மொடக்குறிச்சி அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் இறந்தார்.

மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் இறந்தார். 
தொழிலாளி
மொடக்குறிச்சி அருகே உள்ள சாமிநாதபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவர் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் செயல்படும் ஒரு தனியார் மீன் பண்ணையில் தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார். இந்த பண்ணையில் மீன்கள் வளர்க்க தொட்டிகளும், 150 அடி நீளம், 20 அடி ஆழம் கொண்ட ஒரு குளமும் உள்ளது. 
வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை சண்முகம் மீன் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தார். மாலை 5 மணி அளவில் சண்முகத்தின் செல்போன் மட்டும் அங்குள்ள ஒரு தொட்டியின் சுவர் மீது இருந்தது. ஆனால் அவரை  காணவில்லை.  பண்ணை உரிமையாளர் அவரை தேடிப்பார்த்தார்.
இதனால் சண்முகம் தவறி மீன்வளர்ப்பு தொட்டியில் விழுந்துவிட்டாரா? என்று தேடிப்பார்த்தார். கிடைக்கவில்லை. குளத்தில் விழுந்து இருக்கலாமோ? என்று சந்தேகம் ஏற்பட்டது. 
உடல் மீட்பு
உடனே இதுபற்றி  மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி தேடினார்கள்.
அப்போது தண்ணீரில் மூழ்கி கிடந்த சண்முகத்தில் உடல் கிடைத்தது. பிறகு உடல் மேலே கொண்டுவரப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
சண்முகம் வேலை செய்துகொண்டு இருக்கும்போது குளத்தில் தவறி விழுந்தாரா?, அல்லது வேறு ஏதும் காரணமா? என்று மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இறந்த சண்முகத்துக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.

Next Story