தட்டச்சு- கணினி பயிலகங்களை திறக்கவேண்டும்; தலைமை செயலாளருக்கு கோரிக்கை


தட்டச்சு- கணினி பயிலகங்களை திறக்கவேண்டும்; தலைமை செயலாளருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 3 May 2021 9:47 PM GMT (Updated: 3 May 2021 9:47 PM GMT)

தட்டச்சு- கணினி பயிலகங்களை திறக்க வேண்டும் என்று சங்கத்தினர் தலைமை செயலாளருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு
தட்டச்சு- கணினி பயிலகங்களை திறக்க வேண்டும் என்று சங்கத்தினர் தலைமை செயலாளருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோரிக்கை மனு
தமிழ்நாடு தட்டச்சு-கணினி பள்ளிகள் சங்க மாநில தலைவர் எல்.செந்தில் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 200 அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் இந்த பயிலகங்கள் மூடப்பட்டன. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.
தற்போது மீண்டும் தட்டச்சு-கணினி பயிலகங்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா காலத்தில் பயிலகங்கள் மூடப்பட்டதால் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளன. குறிப்பாக தட்டச்சு பயிற்சியை ஆன்லைன் மூலம் நடத்த முடியாது. இதனால் மாணவ-மாணவிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்க முடியாது.
வாடகை கட்டிடங்கள்
பெரும்பாலான தட்டச்சு பயிற்சி மையங்கள் அனைத்தும் வாடகை கட்டிடங்களில் செயல்படுகின்றன. நீண்டகாலம் மையங்களை மூடினால் வாடகையும் கொடுக்க முடியாது. எனவே தட்டச்சு மையங்கள் நடத்தி வருபவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதுமட்டுமன்றி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வுக்கு தயாரான 1½ லட்சம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.
தட்டச்சு பயிற்சி மையங்களில் அரசின் வழிகாட்டு முறைப்படி போதிய இடைவெளியில் ஒரு மணி நேரம் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் மொத்தமாக யாரும் வர மாட்டார்கள். எனவே பயிற்சி மையத்தை நடத்தி வருபவர்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி விதிமுறைகளுடன் தட்டச்சு- கணினி பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதுபோல் இந்த சங்கத்தினர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள தி.மு.க. தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story