மாவட்ட செய்திகள்

7-வது நாளாக விற்பனை: கொளுத்தும் வெயிலிலும் ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் + "||" + Day 7 on sale: The public waiting for ‘Remdecivir’ in the scorching sun

7-வது நாளாக விற்பனை: கொளுத்தும் வெயிலிலும் ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள்

7-வது நாளாக விற்பனை: கொளுத்தும் வெயிலிலும் ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 7-வது நாளாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. மருந்துக்காக கொளுத்தும் வெயிலிலும், இரவில் சாலையோரத்திலும் பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
சென்னை, 

தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 2 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊழியர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்துள்ளனர். மருந்து கவுண்ட்டர் காலை 10 மணிக்கு தான் திறக்கும் என்றாலும், அதிகாலை முதலே மருத்துவக்கல்லூரி வாசலில் வரிசையில் இடம் பிடித்து மக்கள் காத்துக்கிடக்கிறார்கள்.

பரிதாப நிலை

அதிகாலையிலே கூட்டம் அலைமோதுவதால், நாள் முழுக்க காத்துக்கிடந்தாலும் பலரால் மருந்து வாங்க முடியாமல் போகிறது. இதனால் சிலர் முன்தினம் இரவில் இருந்து வரிசையில் இடத்தை பிடிப்பதற்காக உறங்காமல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தினரை காப்பாற்றி விட வேண்டும் என, தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்காக சாலையோரத்தில் காத்துக்கிடக்கும் பரிதாப நிலையை காணமுடிகிறது.

நாள் ஒன்றுக்கு 500 ரெம்டெசிவிர் மருந்துகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் விற்பனை செய்வதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதில், முதல் நாள் 500 பேருக்கு மருந்து விற்பனை செய்யப்பட்ட உடன், அடுத்து வரிசையில் காத்திருக்கும் முதல் 250 பேருக்கு மட்டும் ‘டோக்கன்’ வழங்கப்படுவதாகவும், மறுநாள் டோக்கன் வைத்திருக்கும் அந்த 250 பேருக்கும் முன்னுரிமை அடிப்படையில் முதலில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வழங்கப்படுவதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

‘டோக்கன்’ முறையில் குளறுபடிகள்

டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மருந்து வழங்கப்பட்ட பின்பு, வரிசையில் காத்திருந்த முதல் 250 பேருக்கு அடுத்ததாக மருந்துகள் வழங்கப்படுகிறது எனவும், அதன்பிறகு வரிசையில் காத்திருக்கும் முதல் 250 பேருக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு மறுநாள் வந்து மருந்து வாங்கிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த டோக்கன் முறையில் பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் நடப்பதாக அங்கிருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்கிய பின்னர், ஒரு சிலர், மருந்து வாங்க காத்திருக்கும் பொதுமக்களோடு மீண்டும் வரிசையில் வந்து நிற்கின்றனர். பின்னர் அவர்கள் வைத்திருக்கும் ஆவணங்களை காட்டி டோக்கனை பெற்று செல்கின்றனர். இதையடுத்து, அவர்கள் பெற்ற டோக்கனை மறுநாள் வந்து, வரிசையில் காத்திருப்பவர்களிடம் அதிகவிலைக்கு விற்று செல்கின்றனர்,’ என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கள்ளச்சந்தையில் விற்பனை

மேலும், பல தனியார் மருத்துவமனைகளில் பணி புரியும் ஊழியர்கள் சிலர், அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் ஆவணங்களை பெற்றுக்கொண்டு, அவர்களது உறவினர்கள் என கூறி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்கி செல்வதாகவும், அதனை கள்ளச்சந்தையில் அதிகவிலைக்கு விற்பதாகவும் பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுகிறது. இதனை முறைப்படி கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

அந்தவகையில் நேற்று 7-வது நாளாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டது. அங்கு அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. நூற்றுக்கணக்கானோர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், குடையுடன் வரிசையில் காத்துக்கிடந்து, மருந்துகளை வாங்கிச்சென்றனர்.

இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறும்போது, ‘நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ளோம். எங்களது குடும்பத்தினரை காப்பாற்றிவிட வேண்டும் என, இரவு-பகலாக கொளுத்தும் வெயிலில் சாலையோரத்தில் மருந்துக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.

பெண்கள் அவதி

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி பெரிய வளாகம். நாங்கள் சாலையில், உட்காருவதற்கு கூட இடம் இல்லாமல், வெயிலில் நாள் முழுவதும் நிற்பதால், உடல் சோர்வாகிறது. பலர் மயக்கம் அடைந்து விழுகின்றனர். எனவே, மருத்துவக்கல்லூரியில் உள்ளே, உட்கார வைக்கவில்லை என்றாலும், மரத்தடி நிழலில் நாங்கள் வரிசையாக நிற்பதற்காகவும் ஏற்பாடுகளை அரசு செய்து தரவேண்டும்.

மேலும், பெண்கள் பலர் ரெம்டெசிவிருக்காக சாலையோரத்தில் காத்துக்கிடக்கின்றனர். ஒரு கழிவறை வசதிக்கூட இல்லாததால், பெண்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, நடமாடும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.

இந்த மருந்து விற்பனையை அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தொடங்க வேண்டும் என்றும், அவ்வாறு தொடங்கப்பட்டால், பொதுமக்கள் இவ்வாறு அவதிப்படும் சூழ்நிலை ஏற்படாது எனவும் சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை வரும் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறப்பு
ஜனாதிபதி மாளிகையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும் பொதுமக்கள் பார்வைக்காக ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
2. டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி
சென்னையில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
3. அரசு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து கொடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அரசு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து கொடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
4. கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை; விழிப்புடன் செயல்பட வேண்டும் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனாவை வெல்ல வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
5. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனைக்கு தடை எதிரொலி; வெள்ளிக்கிழமையான நேற்றே காசிமேடு மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். முககவசம் அணியாதவர்களிடம் போலீசார் ரூ.200 அபராதம் வசூலித்தனர்.