கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து வாடகை வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்


கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து வாடகை வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 4 May 2021 11:56 AM GMT (Updated: 4 May 2021 11:56 AM GMT)

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து வாடகை வாகன டிரைவர்களுக்கு தேனி போலீஸ் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா தடுப்பு பணி தொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கார், வேன் போன்ற வாடகை வாகனங்களில் விதிகளை பின்பற்றாமல் ஆட்களை ஏற்றிச் செல்வது அதிக அளவில் காணப்படுகிறது. இதையடுத்து வாடகை வாகன டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். 
அதன்படி தேனி போலீஸ் நிலையத்தில் வாடகை வாகன டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் தலைமை தாங்கினார். இ்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார், வாடகை வாகன டிரைவர்கள் பலர் கலந்துகொண்டனர். டிரைவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். வாகனத்தில் கிருமி நாசினி வைத்திருந்து, பயணிகளுக்கு வழங்க வேண்டும். வாகனங்களில் தினமும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுபோல், மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்கள் சார்பிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.


Next Story