தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 7 நாட்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்


தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 7 நாட்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 4 May 2021 2:04 PM GMT (Updated: 4 May 2021 2:04 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 7 நாட்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 7 நாட்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை அலுவலர்கள் முழுமையாக கண்காணிக்க வேண்டும். 

உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்காணித்து, சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

7 நாட்கள் சுத்தம் 

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெளியாட்கள் உள்ளே வருகிறார்களா, உள்ளே இருந்து நபர்கள் வெளியே செல்கின்றனரா என்று தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தினமும் கபசுர குடிநீர் வழங்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகளை கட்டாயம் மேற் கொள்ள வேண்டும்.

3 நபர்களுக்கு மேல் கொரோனா ஏற்பட்டால் அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். பாதிக்கப்பட்ட நபரின் வீடு மற்றும் வீட்டின் அருகில் இருபுறங்களிலும் தலா 10 வீடுகளில் கிருமிநாசினி மூலம் தொடர்ந்து 7 நாட்கள் சுத்தம் செய்ய வேண்டும். இதனை வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் கண்காணிக்க வேண்டும். 

கடும் நடவடிக்கை

தடுப்பூசி போடாத நபர்கள் போட்டுக்கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கட்டுபாட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறினால் பேரிடர் மேலாண்மை சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடைகள் மீது எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்று பணிகளை அலுவலர்கள் தொய்வின்றி முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி நிர்மலா, ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, கூடலூர் ஆர்.டி.ஓ.  ராஜ்குமார், மருத்துவ நல பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story