தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு


தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 4 May 2021 2:08 PM GMT (Updated: 4 May 2021 2:08 PM GMT)

கூடலூரில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட 3 இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

கூடலூர்

கூடலூரில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட 3 இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி

கூடலூர் நகராட்சி பகுதியில்  ஒரே நாளில் 24 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் மங்குழி பகுதியில் ஒரே வீட்டில் 8 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 

மேலும் அத்திப்பாளியில் 4 பேர், துப்புகுட்டிபேட்டையில் 2 பேர், 1- மைல், குசுமகிரி, எஸ்.எஸ்.நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர், புத்தூர்வயல், சளி வயல், பழைய நீதிமன்ற சாலை, நடு கூடலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு நபர், நந்தட்டியில் 2 பேர் என மொத்தம் 24 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 இதைத்தொடர்ந்து மங்குழி, அத்திப்பாளி, துப்புகுட்டிபேட்டை ஆகிய இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அதிகாரிகள் அறிவித்தனர். 

அதிகாரிகள் ஆய்வு 

பின்னர் கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், தாசில்தார் தினேஷ்குமார், வட்டார மருத்துவ அதிகாரி கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

தொடர்ந்து அப்பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் தொற்றுப் பாதித்தவர்களின் வீடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் கூறியதாவது:-

அடையாள குறியீடு 

கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும். 

வணிக நிறுவனங்கள், கடைகளில் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியை அடையாளப்படுத்தும் வகையில் அடையாளக் குறியீடு வரைந்து இருக்க வேண்டும். 

பொதுமக்கள் தேவை இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story