கொரோனா விதிகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்


கொரோனா விதிகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 4 May 2021 2:15 PM GMT (Updated: 4 May 2021 2:15 PM GMT)

ஊட்டியில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

ஊட்டி
ஊட்டியில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி உணவகங்கள், டீக்கடைகளில் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி இல்லை. இந்த நிலையில் ஊட்டி நகராட்சியில் உள்ள உணவகங்கள், டீக்கடைகளில் அரசு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி தலைமையில் சுகாதார அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.

ஊட்டி சேரிங்கிராசில் ஒரு பாஸ்ட்புட் கடையில் பார்சல் வினியோகம் செய்தபோது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்கள் கூட்டமாக நின்று இருந்தனர். உடனடியாக நகராட்சி ஆணையாளர் அந்த கடைக்கு ரூ.500 அபராதம் விதித்தார். 

3 கடைகளுக்கு ‘சீல்’

ஊட்டி கலெக்டர் அலுவலக சாலையில் பச்சை குத்தும் (டாட்டூ) நிலையம் செயல்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இது அழகு நிலையத்தில் சேர்வதால் விதிமுறைப்படி மூடியிருக்க வேண்டும். 

மேலும் இந்த நிலையம் செயல்படுவதற்காக நகராட்சியிடம் அனுமதி பெறவில்லை. தொடர்ந்து அந்த நிலையம் மூடி சீல் வைக்கப்பட்டது.ஊட்டி சேரிங்கிராசில் டீக்கடையில் இருக்கைகளில் அமர்ந்து வாடிக்கையாளர்கள் டீ அருந்தினர். 

அரசு விதிமுறையை மீறியதால் அதிகாரிகள் அந்த கடையை மூடி சீல் வைத்தனர். ஊட்டி கமர்சியல் சாலையில் ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டனர். 

ஆய்வின்போது கண்டறிந்த அதிகாரிகள் கொரோனா பரவலை தடுக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்தும், கடைபிடிக்க தவறியதால் உணவகத்தை மூடி சீல் வைத்தனர். 

ரூ.5 ஆயிரம் அபராதம் 

ஊட்டி தாசில்தார் குப்புராஜ் ஊட்டி-குன்னூர் சாலையில் தனியார் மினி பஸ்களில் விதிமுறையின்படி பயணிகள் செல்கிறார்களா என்று  ஆய்வு செய்தார். அப்போது ஒரு மினி பஸ்சில் பயணிகள் நின்று கொண்டு கூட்டமாக பயணம் செய்தனர். 

விதிமுறையை மீறிய தனியார் பஸ் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story