ஊட்டி மைதானம் மணல் கொட்டி சீரமைப்பு


ஊட்டி மைதானம் மணல் கொட்டி சீரமைப்பு
x
தினத்தந்தி 4 May 2021 2:23 PM GMT (Updated: 4 May 2021 2:23 PM GMT)

ஊட்டியில் உழவர் சந்தையை இடமாற்ற மைதானம் மணல் கொட்டி சீரமைக்கப்பட்டது. கடைகள் அமைக்க அளவீடும் செய்யப்பட்டது.

ஊட்டி

ஊட்டியில் உழவர் சந்தையை இடமாற்ற மைதானம் மணல் கொட்டி சீரமைக்கப்பட்டது. கடைகள் அமைக்க அளவீடும் செய்யப்பட்டது.

விவசாயிகள் எதிர்ப்பு 

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 85 கடைகள் உள்ளன. கொரோனா 2-வது அலை பரவி வருவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. 

உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் வட்டங்கள் வரையவில்லை. கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி, தண்ணீர், சோப்பு வைக்கப்படவில்லை. கடைகள் நெருக்கமாக இருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதை தொடர்ந்து தொற்று பரவலை தடுக்க உழவர் சந்தையை தற்காலிகமாக ஏ.டி.சி.யில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 மழை பெய்தால் காய்கறிகள், பழங்களை பாதுகாப்பாக வைப்பது சிரமம். மைதானம் சேறும், சகதியுமாக மாறினால் வியாபாரம் இருக்காது என்று கூறினர். இதை அடுத்து மைதானத்தில் குண்டும், குழியுமான இடங்களில் மணல் கொட்டி சமன்படுத்தப்பட்டது.

மாற்றம்

மேலும் மைதானம் சேறும், சகதியுமாக மாறாமல் இருக்க காய்கறிகள் கொண்டு வரும் வாகனங்கள் நுழைவுவாயில் பகுதியில் இறக்க அனுமதிக்கப்படுகிறது. உள்ளே வர அனுமதி இல்லை. 

 உழவர் சந்தை மைதானத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்ததால் இடமாற்றம் செய்யவில்லை. தற்போது முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. புதிய கட்டுப்பாடுகளின் படி வியாழக்கிழமை முதல் மதியம் 12 மணி வரை மட்டும் கடைகள் செயல்படும்.

ஊட்டியில் நாளை முதல் மைதானத்தில் உழவர் சந்தை செயல்படுகிறது. 
இதையொட்டி மைதானத்தில் 85 கடைகள் அமைக்க அதிகாரிகள் இடைவெளி விட்டு அளவீடு செய்தனர். 

வெள்ளை பவுடர் போட்டு கடைகள் அமைக்கப்பட உள்ள இடத்தை குறித்தனர். அதேபோல் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் நெருக்கமாக உள்ளதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. 

கடந்த ஆண்டை போல் சுழற்சி முறையில் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story