ராஜஸ்தான் திரும்பிய துணை ராணுவ வீரர்கள்


ராஜஸ்தான் திரும்பிய துணை ராணுவ வீரர்கள்
x

தேர்தல் பாதுகாப்பு பணி நிறைவுபெற்றதால் துணை ராணுவ வீரர்கள் ராஜஸ்தானுக்கு புறப்பட்டனர். திண்டுக்கல்லில் இருந்து மரக்கன்றுகளை வாங்கி சென்றனர்.

திண்டுக்கல்:

துணை ராணுவ வீரர்கள் 

தமிழக சட்டமன்ற தேர்தல், கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. இதையொட்டி தமிழக போலீசாருடன் இணைந்து, துணை ராணுவ வீரர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. எனவே, திண்டுக்கல் மாவட்டத்துக்கு 6 கம்பெனிகளை சேர்ந்த 480 துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணிக்காக வந்தனர்.

மராட்டியம், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அவர்கள் வந்திருந்தனர். மேலும் தேர்தல் பறக்கும் படையினருடன் வாகன சோதனை, வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணியில் ஈடுபட்டனர்.

 இதையடுத்து வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும் 5 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.

ராஜஸ்தான் புறப்பட்டனர் 

ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு கம்பெனியை சேர்ந்த 80 துணை ராணுவ வீரர்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இதற்கிடையே கடந்த 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், துணை ராணுவ வீரர்கள் தனி ரெயில் மூலம் சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டனர்.

இதற்காக அவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்களுடன் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்தனர். அப்போது ஒருசில வீரர்கள் பூச்செடிகள், அலங்கார செடிகள் மற்றும் தென்னங்கன்றுகள் உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகளை வாங்கி சென்றனர்.

 இதுகுறித்து அவர்கள் கூறுகையில், திண்டுக்கல்லில் மக்கள் வீடுகளில் மரங்கள், செடிகள் வளர்ப்பதை பார்க்க அழகாக இருக்கிறது. எனவே, நாங்களும் வீடுகளில் வளர்ப்பதற்காக மரக்கன்றுகளை வாங்கி செல்கிறோம், என்றனர்.

Next Story