ஓட ஓட விரட்டி 2 பேர் குத்திக்கொலை


ஓட ஓட விரட்டி 2 பேர் குத்திக்கொலை
x
ஓட ஓட விரட்டி 2 பேர் குத்திக்கொலை
தினத்தந்தி 4 May 2021 3:46 PM GMT (Updated: 4 May 2021 3:46 PM GMT)

ஓட ஓட விரட்டி 2 பேர் குத்திக்கொலை

கோவை


கோவையை அடுத்த சிங்காநல்லூர் கக்கன்நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 48). பெயிண்டர். 

சூலூர் அருகே பாரதிபுரத்தை சேர்ந்த ஆனந்த குமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுகுடித்துவிட்டு வந்து மகேசின் வீட்டில் கற்களை வீசி தகராறு செய்தார். 

இதை தட்டி கேட்பதற்காக நேற்று காலை மகேஷ், தனது உறவினர்கள் வசந்த் (30), பிரேம் (29) ஆகியோரை அழைத்துக்கொண்டு ஆனந்த குமாரின் வீட்டுக்கு சென்றார். 

அங்கு அவர்கள், ஆனந்தகுமாரிடம் கல் வீசியது குறித்து கேட்டனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆனந்தகுமாருக்கு ஆதரவாக அவருடைய மகன்கள் சரவணன், சதீஷ், ஹரி மற்றும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ், ஸ்ரீநாத் ஆகியோர் பேசினர். 
பின்னர் அவர்கள் 6 பேரும் சேர்ந்து வீட்டில் கல்வீசியதை தட்டிக்கேட்க வந்த மகேஷ், வசந்த், பிரேம் ஆகிய 3 பேரையும் தாக்க தொடங்கினர்.

இதனால் அவர்கள் ஓடத் தொடங்கினர். ஆனாலும் அவர்களை ஓட, ஓட விரட்டி 6 பேரும் சேர்ந்து இரும்புத்தடி மற்றும் ஓடுகளால் சரமாரியாக தாக்கினர். மேலும் ஆத்திரம் அடங்காமல் மகேஷ், வசந்த், பிரேம் ஆகியோரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர். 

இதில் படுகாயம் அடைந்த வசந்த் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்தி லேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மகேஷ் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 


அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். பிரேம் லேசான காயங்களுடன் தப்பி ஓடி உயிர் தப்பினார். ஓட ஓட விரட்டி 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

இந்த இரட்டைக்கொலை தொடர்பாக கஞ்சா வியாபாரி சரவணன், அவருடைய சகோதரர்கள் சதீஷ், ஹரி, இவர்களுடைய தந்தை ஆனந்தகுமார் மற்றும் நண்பர்கள் தினேஷ், ஸ்ரீநாத் ஆகிய 6 பேரை  மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்தனர். 


கைதான சரவணன் மீது கஞ்சா வழக்குகள் உள்ளன. அவருக்கு லேசான காயம் உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 கொலை நடந்த 2 மணி நேரத்தில் கொலையாளிகள் 6 பேரையும் கைது செய்த போலீசாரை உயர்அதிகாரிகள் பாராட்டினர்.

Next Story