மாவட்ட செய்திகள்

நாகையில் கோலா கருவாடு உற்பத்தி மும்முரம் ஒரு கருவாடு ரூ.10-க்கு விற்பனை + "||" + cola fish

நாகையில் கோலா கருவாடு உற்பத்தி மும்முரம் ஒரு கருவாடு ரூ.10-க்கு விற்பனை

நாகையில் கோலா கருவாடு உற்பத்தி மும்முரம் ஒரு கருவாடு ரூ.10-க்கு விற்பனை
நாகையில் கோலா மீன் கருவாடு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கருவாடு ரூ.10-க்கு விற்பனையாகி வருகிறது.
நாகப்பட்டினம்:-

நாகையில் கோலா மீன் கருவாடு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கருவாடு ரூ.10-க்கு விற்பனையாகி வருகிறது.

கருவாடு காய வைக்கும் தளம்

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குடிசைகள் அமைத்து கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நெத்திலி, வாளை, கிழங்கா, ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, திருக்கை, வஞ்சரம் மற்றும் கோழித்தீவனத்துக்கு பயன்படுத்தப்படும் கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களில் கருவாடு தயாரிக்கப்படுகிறது.

ரூ.1 கோடி வர்த்தகம்

இங்கு தயாராகும் கருவாடுகள் திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், கரூர், வேலூர் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் தினந்தோறும் 500 கிலோ முதல் 1 டன் வரையிலான கருவாடு தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும்.
தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. இந்த காலகட்டத்தில் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே தொழிலுக்கு செல்வதால், வகை வகையான மீன்கள் கருவாட்டுக்கு கிடைப்பதில்லை. 

நெத்திலி கருவாடு

இதனால் கேரள மாநிலத்தில் இருந்து நெத்திலி மீன்களை, வாங்கி நாகை கொண்டு வந்து கருவாடு தயாரித்து வந்தனர். இந்த நிலையில் நாகையில் கோலா மீன் சீசன் ஆரம்பித்துள்ளது. எனவே தற்போது கோலா மீன் கருவாடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
நாகையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று முதல் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம், வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. இதனை பயன்படுத்தி நாகை அக்கரைப்பேட்டையில் கோலா கருவாடு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கருவாடு தயாரிப்புப் பணியில் ஈடுபடும் ஜோதி கூறியதாவது:-
மீன்கள் கிடைப்பதில்லை
அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள கருவாடு காயவைக்கும் தளத்தில் ஏராளமான மீன் வகைகளை கொண்டு கருவாடு தயாரித்து வந்தோம். தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. 
எனவே போதிய அளவிலான மீன்கள் கருவாடு தயாரிப்பதற்கு கிடைப்பதில்லை. இந்த தடை காலத்தில் குறைந்த தொலைவில் சென்று தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.
தற்போது கோலா மீன் சீசன் ஆரம்பித்துள்ளதால், அதன் வரத்து அதிகரித்துள்ளது. பெரும்பாலான பைபர் படகுகளில் கோலா மீன்கள் அதிகளவில் சிக்குகிறது. எனவே கோலா மீன்களை வைத்து அதிக அளவில் கருவாடு தயாரித்து வருகிறோம். 

மக்கள் விருப்பம்

சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கோலா கருவாடுகளை அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். இந்த மாவட்ட மக்கள் கோலா கருவாடுகளை விரும்பி வாங்குகின்றனர்.  
ஒரு கோலா மீன் கருவாடு ரூ.10-க்கு விற்பனையாகிறது. கொரோனா காரணமாக போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கருவாடுகளை விற்பனைக்கு அனுப்புவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கோடை மழை பெய்தால் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்படும். அந்த சூழ்நிலையில் அரசு நிவாரணம் வழங்கினால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.