மாவட்ட செய்திகள்

கடலூர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கினால் மிரட்டி பறிக்கும் போலீசார் + "||" + Police intimidate people into buying liquor

கடலூர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கினால் மிரட்டி பறிக்கும் போலீசார்

கடலூர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கினால் மிரட்டி பறிக்கும் போலீசார்
கடலூரில் டாஸ்மாக் கடைகளில் வாங்கிய சிறிது தூரத்திலேயே மதுபாட்டில்களை போலீசார் பறித்துச் செல்கின்றனர். இதனால் மதுபிரியர்கள் புலம்புகின்றனர்.
கடலூர், 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மதுபிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, ஒரு நபர் அதிகபட்சமாக 750 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 பாட்டில்கள் அல்லது 10 குவார்ட்டர் மதுபாட்டில்களை மட்டுமே வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியது.

மேலும் கடைகளை மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறந்து வியாபாரம் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகங்களுக்கும் அரசு உத்தரவிட்டது. இதனால் கடலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.

கடலூருக்கு படையெடுப்பு

இந்த நிலையில் கடலூரில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கிவிட்டு சென்றால், சிறிது தூரத்திலேயே அதனை போலீசார் மிரட்டி பறித்துச் செல்லும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அடைக்கப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தை சேர்ந்த மதுபிரியர்களும் கடலூருக்கு படையெடுத்து வந்து மதுபானம் வாங்கி அருந்தி வருகின்றனர்.

தடுப்பு கட்டைகள்

இதனால் அந்த 2 டாஸ்மாக் கடைகளும் எந்நேரமும் மதுபிரியர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் டாஸ்மாக் கடைகளின் இருபுறமும் தடுப்புக் கட்டைகள் கட்டி, வரிசையில் நின்று வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் கலால் துறை போலீசார் கண்கொத்தி பாம்பாக செயல்பட்டு, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மதுபானங்களை கடத்திச் செல்வதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில போலீசார், அதற்கு ஒருபடி மேல் சென்று, டாஸ்மாக் கடைகளில் யாரேனும் 5 மதுபாட்டில்களுக்கு மேல் வாங்குகிறார்களா? என கண்காணிக்கின்றனர். பின்னர் யாரேனும் 5 மதுபாட்டில்களுக்கு மேல் வாங்கிச் சென்றால், அந்த நபர்களை டாஸ்மாக் கடைகளில் இருந்து போலீசாரும் மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து செல்கின்றனர்.

மிரட்டி பறிப்பு

தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவுக்குள் மதுபிரியர்களை போலீசார் வழிமறித்து, அவர்களிடம் மதுபானங்களை தங்களிடம் கொடுக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டி மதுபாட்டில்களை பறித்துச் சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதுபோல் கடந்த 3 நாட்களாக போலீசார் செயல்படுவதாக மதுபிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மதுபிரியர்கள் கூறுகையில், நாங்கள் கடையில் மதுபாட்டில்கள் வாங்கும் போதே, எங்களை போலீசார் கண்காணிக்கின்றனர். அளவுக்கு அதிகமாக மதுபானங்கள் வாங்கக்கூடாது என்றால், கடையில் வைத்தே போலீசார் எங்களை தடுப்பதில்லை. மாறாக நாங்கள் கடையில் வாங்கிவிட்டு சிறிது தூரம் சென்றதும், வழிமறித்து 5-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை வாங்கிச் செல்லக்கூடாது. மீறி கொண்டு செல்ல வேண்டும் என்றால் தங்களுக்கு பணம் கொடுங்கள் அல்லது மதுபாட்டில்களை கொடுத்து விட்டு செல்லுங்கள் என மிரட்டல் விடுக்கின்றனர்.

மதுபிரியர்கள் வேதனை

இதனால் நாங்கள் வேறு வழியின்றி மதுபாட்டில்களை போலீசாரிடம் கொடுத்து விட்டு செல்கிறோம். நாங்கள் மதுபாட்டில்களை கடத்திச் சென்றால் போலீசார் நடவடிக்கை எடுக்கட்டும், ஆனால் கடையில் வாங்கி விட்டு சென்ற சிறிது தூரத்திலேயே எங்களை மடக்கி, எந்தவொரு கேள்வியும் கேட்காமல் மதுபாட்டில்களை பறித்துச் செல்வது வேதனையாக உள்ளது என்றனர்.