ஐம்பொன் சரஸ்வதி சிலையை விற்க முயன்றவர் கைது


ஐம்பொன் சரஸ்வதி சிலையை விற்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 4 May 2021 4:33 PM GMT (Updated: 4 May 2021 4:33 PM GMT)

வெள்ளகோவில் அருகே 1½ கிலோ எடையுள்ள ஐம்பொன் சரஸ்வதி சிலையை விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே 1½ கிலோ எடையுள்ள ஐம்பொன் சரஸ்வதி சிலையை விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது
ஐம்பொன் சிலை
 திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், ஏட்டு மணிமுத்து மற்றும் சதீஷ் ஆகியோர் வெள்ளகோவில் மாந்தபுரம் நாட்டராயசுவாமி கோவில் ரோட்டில் நேற்று காலை 11 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். 
இதனால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் வெள்ளகோவில் மாந்தபுரத்தை சேர்ந்த ஞானசேகரன் மகன் ரமேஷ் (வயது 37) என்பது தெரியவந்தது. இவர் எம்.சி.ஏ படித்துள்ளார். அவர் வைத்திருந்த பையில் 1½ கிலோ எடையில் 17 சென்டி மீட்டர் உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன சரஸ்வதி அம்மன் சாமி சிலையை வைத்திருந்தார். 
கைது
சிலை குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கரூரை சேர்ந்த ஒரு பெண் மூலம் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள ஒருவரிடம் ரூ.4 லட்சம் கொடுத்து அந்த சரஸ்வதி ஐம்பொன் சிலையை வாங்கியதாகவும், அதை பாதுகாப்பாக வைத்திருந்து தற்போது அதிக விலைக்கு விற்பதற்காக எடுத்து செல்வதாகவும் ரமேஷ் கூறியுள்ளார். 
இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து அவரிடமிருந்த சரஸ்வதி ஐம்பொன் சிலையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை காங்கேயம்  நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி பிரவீன்குமார் ரமேசை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

-------

Next Story