ஒரே நாளில் 494 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 494 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 May 2021 4:39 PM GMT (Updated: 4 May 2021 4:39 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார்.
494 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கோரதாண்டம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று குறையவில்லை.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திருப்பூரில் 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 213-ஆக உயர்ந்துள்ளது.
ஒருவர் பலி
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 550 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 924-ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த 63 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். 
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 244-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
42 சதவீதம்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் சிகிச்சை பெறும் வகையில் மொத்தமாக 1,535 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இந்த படுக்கைகளும் விறு, விறுப்பாக நிரம்பி வருகின்றன. பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா படுக்கைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதுபோல் இதுவரை 58 சதவீதம் கொரோனா படுக்கைகள் நேற்று வரை நிரம்பியுள்ளன. 42 சதவீதம் படுக்கைகள் கைவசம் இருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சை பெறலாம். அறிகுறி இருக்கிறவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Story