நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்


நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 4 May 2021 4:58 PM GMT (Updated: 4 May 2021 4:58 PM GMT)

வனவிலங்குகளின் தேவைக்காக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இங்கு மான்,  குரங்கு, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடும் வெயில் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் சிமெண்டு தொட்டிகள் அனைத்தும் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்படுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து அவைகள் தண்ணீர் தேடி அடிக்கடி காப்புக்காட்டில் இருந்து வெளியேறி கிராம புறங்களுக்கு வருகிறது. அவ்வாறு வரும்போது வனவிலங்குகள் சில நேரங்களில் வாகன விபத்து அல்லது கிணறுகளில் தவறி விழுந்து செத்து வருகின்றன.

டேங்கர் லாரி

 இதை தடுக்க வனவிலங்குகளுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வனப்பகுதிக்கு உட்பட்ட செம்பாகுறிச்சி, தோட்டபாடி பகுதியில் உள்ள குட்டைகள், சிமெண்டு தொட்டிகளில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலர் காதர்பாஷா, வனவர் பிரவீன்குமார், வனக்காப்பாளர் ராமநாதன் மற்றும் வனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Next Story