கொரோனா பாதுகாப்பு விதியை மீறியதாக தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பு


கொரோனா பாதுகாப்பு விதியை மீறியதாக  தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 4 May 2021 5:11 PM GMT (Updated: 4 May 2021 5:11 PM GMT)

கொரோனா பாதுகாப்பு விதியை மீறியதாக தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரம்,

அதிகாரிகள் ஆய்வு

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பஸ்களில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணம் மேற்கொள்ளவும், நின்றுகொண்டு பயணம் செய்யக்கூடாது என்றும், ஆட்டோக்களில் டிரைவரை தவிர்த்து 2 பேரும், ஷேர் ஆட்டோக்களில் டிரைவரை தவிர்த்து 4 பேரும், வாடகை கார்களில் டிரைவரை தவிர்த்து 3 பேரும் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இந்த கட்டுப்பாட்டின்படி விழுப்புரத்தில் வாகனங்கள் முறையாக இயக்கப்படுகின்றதா என்று நேற்று விழுப்புரம்- செஞ்சி சாலையில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், தேர்தல் துணை தாசில்தார் வெங்கட்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பஸ்கள், ஷேர் ஆட்டோக்களுக்கு அபராதம்

அப்போது விழுப்புரத்தில் இருந்து அனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த பஸ்சில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதால் அவர்கள் நின்று கொண்டு பயணம் செய்ததை கண்டறிந்த அதிகாரிகள் அந்த பஸ்சிற்கு ரூ.1,200 அபராதம் விதித்தனர். அதுபோல் விழுப்புரத்தில் இருந்து திருவாமாத்தூருக்கு புறப்பட்ட ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த ஆட்டோவில் 10 பயணிகள் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஷேர் ஆட்டோ டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொரோனா பாதுகாப்பு விதியை மீறி அதிக பயணிகளை ஏற்றி வந்த 2 ஷேர் ஆட்டோக்களுக்கு தலா ரூ.500-ம், கடலூரில் இருந்து விழுப்புரம் வந்த தனியார் பஸ்சிற்கு ரூ.1,200-ம் அபராதமாக விதித்ததோடு, கொரோனா விதிகளை மீறி பயணிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். 

அறிவுரை

மேலும் பஸ் நிலைய பயணிகளுக்கு போலீசார், ஒலிப்பெருக்கி மூலம் அறிவுரை வழங்கினர். அப்போது அவர்கள் கூறுகையில், பொது இடத்தில் யாரும் எச்சில் துப்புதல் கூடாது, தேவையின்றி வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைக்காக வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என்று அறிவுறுத்தினர்.


Next Story