குல தெய்வ கோவில் அருகே டிராவல்ஸ் அதிபர் தற்கொலை


குல தெய்வ கோவில் அருகே டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2021 6:00 PM GMT (Updated: 4 May 2021 6:00 PM GMT)

கடன் தொல்லை காரணமாக குல தெய்வ கோவில் அருகே டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே சங்கந்திடல் கண்மாய் பகுதியில் உள்ள கோவில் அருகே மாமரத்தில், வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை அணிந்திருந்த 52 வயது மதிக்கத்தக்க ஒருவர் நைலான் கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியே சென்றவர்கள் இது குறித்து காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய பிணத்தை கைப்பற்றி சோதனை மேற்கொண்டர். சோதனையின் போது இறந்தவரின் சட்டைப்பையில் செல்போன் இருந்தது. அதன் மூலம் போலீசார் விசாரணை நடத்திய போது இறந்தவர் கோவை விமான நிலையம் அருகே வாடகைக்கு கார் அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த புகழேந்திரன் என்பது தெரியவந்தது. இவர் சமீபகாலமாக கடன் தொல்லையால் விரக்தியான நிலையில் இருந்து வந்ததும் தெரியவந்தது. அதன்பின் அவர் காரைக்குடி வந்து சம்பவ இடத்தில் தூக்கிட்டு தற்கொலை .செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இடம் அருகே உள்ள கோவில் அவரது குலதெய்வம் கோவில் என்றும் அதனாலேயே அவர் இங்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story