மூதாட்டியை கடத்தி வீடுகள் இடிப்பு:ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 6 பேர் கைது


மூதாட்டியை கடத்தி வீடுகள் இடிப்பு:ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 4 May 2021 6:08 PM GMT (Updated: 4 May 2021 6:11 PM GMT)

மூதாட்டியை கடத்தி வீடுகள் இடிப்பு: ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 6 பேர் கைது.

பாப்பாரப்பட்டி,

பாப்பாரப்பட்டி அருகே மூதாட்டியை காரில் கடத்தி சென்று விட்டு அவருடைய 2 வீடுகளை இடித்த ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பத்திரப்பதிவு
பாலக்கோடு அருகே செக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 71). இவரது கணவர் மாணிக்கம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகளும் திருமணத்துக்கு பிறகு இறந்து விட்டார். இதனால் மூதாட்டி மீனாட்சி தனது மகள் வழி பேரன் சபரி கணேசன் மற்றும் பேத்தியுடன் செக்கோடி கிராமத்தில் தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் மீனாட்சியின் கணவர் மாணிக்கம் பெயரில் இருந்த விவசாய நிலத்தை செக்கோடி கிராமத்தை சேர்ந்த ஒருவரிடமிருந்து முறைகேடாக தர்மபுரியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் உதயசூரியன் (50) என்பவர் வாங்கி பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 
இதையடுத்து மீனாட்சியை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டு நிலத்தை எடுத்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2-ந் தேதி மீனாட்சி வீட்டில் தனியாக இருந்தார். பாடி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி, பாப்பாரப்பட்டி முருகேசன் காலனியை சேர்ந்த செந்தில்குமார், கிருஷ்ணாபுரம் அருகே நாய்க்கன்பட்டியை சேர்ந்த மோகன் பாபு ஆகிய 3 பேர் ஒரு காரில் மீனாட்சியின் வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறி வீட்டில் கஞ்சா வைத்து விற்பதாக புகார் வந்துள்ளதாகவும் அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி மூதாட்டி மீனாட்சியை காரில் கடத்தி சென்றனர். 
வீடு இடிப்பு
இதையடுத்து விசாரணை என்ற பெயரில் கத்தியை காட்டி மிரட்டி மீனாட்சியை காரில் அடைத்து வைத்து பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர். இந்தநிலையில் ரியல் எஸ்டேட் பிரமுகர் உதயசூரியன், பூகானஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதையன், தொப்பூர் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் பொக்லைன் வாகனத்துடன் செக்கோடி கிராமத்திற்கு வந்தனர். பின்னர் மூதாட்டியின் ஓட்டு வீடு மற்றும் ஆஸ்பெட்டாஸ் கூரை கொண்ட வீடு ஆகிய 2 வீ்ட்டையும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி விட்டு இடிபாடுகளை மூதாட்டியின் நிலத்தில் இருந்த விவசாய கிணற்றில் கொட்டி மூடி உள்ளனர். மேலும் வீட்டில் இருந்த தட்டுமுட்டு சாமான்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். 
கைது
இதையடுத்து காரில் இருந்து இறக்கி விடப்பட்ட மீனாட்சி வீட்டுக்கு சென்று பார்த்தபோது தனது 2 வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு விவசாய கிணறு மூடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த தனது பேரன் சபரிகணேசனிடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பாப்பாரப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார்.
இதில் ரியல் எஸ்டேட் அதிபர் உதயசூரியன், பழனிசாமி, செந்தில்குமார், மோகன்பாபு, மாதையன், சுரேஷ் ஆகிய 6 பேர் மீது கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் மூதாட்டியை கடத்தி செல்ல பயன்படுத்திய கார், வீட்டை இடிப்பதற்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மூதாட்டியை கடத்தி விட்டு அவரது வீடுகளை இடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=========

Next Story