ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்தார்


ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்தார்
x
தினத்தந்தி 4 May 2021 6:25 PM GMT (Updated: 4 May 2021 6:25 PM GMT)

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றிய பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

தாராபுரம்
தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றிய பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்தார். 
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
பள்ளி மாணவர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீதாநகர் பகுதியில் வசித்து வருபவர் முகமது ரபி. இவரது மகன் நிஷாஆசீப் (வயது17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது் கொரோனா தாக்கத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் படித்து வந்தார்.
 இந்த நிலையில் நேற்று மதியம் நிஷாஆசீப் தனது நண்பர்களுடன் அலங்கியம் சாலையில் உள்ள சீத்தக்காடு பகுதியில் அமராவதி தடுப்பணையில் குளிப்பதற்காக சென்று ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது இவரின் அருகே எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் ஒரு பெண் நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்ததை கண்டு நிஷாஆசீப் அந்தபெண்ணை மேலே தூக்கி விட்டு காப்பாற்றினார். 
சேற்றில் சிக்கி பலி
அந்த சமயத்தில் நிஷா ஆசீப்பின் கால்கள் சகதியில் சிக்கிக்கொண்டது. அப்போது கால்களை எடுக்க முயற்சித்த போது முடியாமல் நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
 2 மணி நேர தேடலுக்குப்பின் மாணவர் நிஷாஆசீப் பிணமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து அலங்கியம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து நிஷாஆசீப் தந்தை முகமது ரபி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் பல உயிர்களை பலிவாங்கிய சீத்தக்காடு பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story