கொத்தனார் கொலையில் கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர்


கொத்தனார் கொலையில் கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 4 May 2021 7:11 PM GMT (Updated: 4 May 2021 7:11 PM GMT)

முப்பந்தல் அருகே கொத்தனார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர். கோவிலில் கொள்ளையடித்ததை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

ஆரல்வாய்மொழி:
முப்பந்தல் அருகே கொத்தனார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர். கோவிலில் கொள்ளையடித்ததை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது. 

கொத்தனார் படுகொலை

ஆரல்வாய்மொழி தெற்கு குமாரபுரம் மன்னராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 40), கொத்தனார். இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ஞானசேகரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் நாங்குநேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். 
இந்தநிலையில் ஞானசேகர் கடந்த 30-ந் தேதி முப்பந்தல் அருகே கண்ணுபொத்தை பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் முதல்கட்டமாக ஞானசேகருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்ற தகவலை சேகரிக்க தொடங்கினர். 

3 பேர் சிக்கினர்

அப்போது காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கலந்தபனையைச் சேர்ந்த ஒருவரும், அவரைகுளத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளிட்ட 4 பேர்கள் கூட்டாளிகளாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் அதிரடியாக இறங்கினர். 
நேற்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ரெயில்வே நிலையத்தில் வைத்து 3 பேர் போலீசில் சிக்கினர். அவர்களை ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

கோவிலில் கொள்ளை

ஞானசேகரும் அவரது கூட்டாளிகளும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது. 
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானசேகரனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து 1½ கிலோ மதிப்புள்ள வெள்ளி கிரீடத்தை கொள்ளையடித்துள்ளனர். அதை பங்கு போடுவதில் அவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. 
மேலும், இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். அப்போது மது போதையில் ஞானசேகர் கூட்டாளிகளை ஆபாசமாக பேசுவதும், அவர்களது வீட்டில் உள்ள பெண்களை இழிவாக பேசும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். 

ஒருவர் தலைமறைவு

இதனால், கூட்டாளிகள் 4 பேரும் சேர்ந்து ஞான சேகரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று அவரை வீட்டில் இருந்து மறைவான இடத்துக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  இந்த சம்பவத்தில் தொடர்புைடய 4-வது நபர் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடித்த பின்புதான் கொலை பற்றிய முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story