உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக 2 பேர் தாக்கப்பட்ட நிலையில் இரு சக்கரவாகனம், வேன் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது


உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக  2 பேர் தாக்கப்பட்ட நிலையில் இரு சக்கரவாகனம், வேன் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 4 May 2021 7:29 PM GMT (Updated: 4 May 2021 7:29 PM GMT)

விருதுநகர் அருகே வீடுகள், வாகனங்களுக்கு தீ வைப்பு

விருதுநகர் 
விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்திரா, பிரேமா ஆகியோர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் பிரேமா வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அக்கிராமத்திலுள்ள காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த இருதரப்பை சேர்ந்தவர்கள் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்திராவிற்கு ஆதரவாக மாதவனும், பிரேமாவுக்கு ஆதரவாக தங்கபாண்டியன் என்பவரும் செயல்பட்டு வந்தனர். 
கடந்த 2013-ம் ஆண்டு ஒரு கொலைச் சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதனை அடுத்து அவ்வப்போது சிறு மோதல்கள் நடந்து வந்தன. கடந்த மாதம் நடந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக மாதவன் என்பவர் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார். 
இந்நிலையில் நேற்று இரவு தங்கபாண்டியன் (வயது 40), அவரது மனைவி லாவண்யா(37) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மாதவன் தரப்பினர் அவர்கள் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து வடமலைக்குறிச்சி காமராஜர்காலனி பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மாதவன் மற்றும் தங்கப்பாண்டி தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
 தீ வைப்பு 
இதனை தொடர்ந்து மாதவன் தரப்பினர் மினி வேன் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் தீ வைக்கப்பட்டது. மேலும் மாதவன் ஆதரவாளர் மணிமாறன் என்பவரது வீட்டில் உள்ள பொருட்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து காமராஜ் காலனியில் உள்ள இருதரப்பினரும் வெளியேறி விட்டனர். வீடுகளில் பெண்கள் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். 
இதுகுறித்து தகவலறிந்த ஆமத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் காலனியில் இருப்பவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 10 வருடங்களாக மோதல் சம்பவங்கள் தொடரும் நிலை உள்ளது.

Next Story