அக்னி நட்சத்திர வெயிலை தாங்க முடியாமல் மக்கள் அவதி


அக்னி நட்சத்திர வெயிலை தாங்க முடியாமல் மக்கள் அவதி
x
தினத்தந்தி 4 May 2021 8:09 PM GMT (Updated: 4 May 2021 8:09 PM GMT)

திருச்சியில் அக்னி நட்சத்திர வெயிலை தாங்க முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர்.

திருச்சி, 
திருச்சியில் அக்னி நட்சத்திர வெயிலை தாங்க முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர். இந்தநிலையில் மாலையில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதையொட்டி கடந்த இரு வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழை ஓரளவு திருச்சியில் வெயிலின் தாக்கத்தை குறைத்து இருந்தது.
ஆனாலும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதன் காரணமாக திருச்சியில் நேற்று காலையில் இருந்தே வெயில் கொளுத்தியது.

பிற்பகல் 2 மணி வரை வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்ததால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க மக்கள் குளிர்பான கடைகள் மற்றும் இளநீர் கடைகளை நோக்கி படையெடுத்தனர். 

குளிர்ந்த காற்று

முலாம்பழம், தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிட்டு தாகத்தை தணித்தனர். இந்நிலையில் மாலை 4 மணியளவில் திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளிலும் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.  

மேலும் மழை பெய்வதற்கான அறிகுறியாக வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. ஆனால் மழை பெய்யவில்லை. இது ஏமாற்றம் தான் என்றாலும் மாலையில் வீசிய குளிர்ந்த காற்று திருச்சி மாநகர மக்களை ஓரளவு நிம்மதி அடைய வைத்தது.

Next Story