சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை


சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 May 2021 8:09 PM GMT (Updated: 4 May 2021 8:09 PM GMT)

முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் முற்றுகையிட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சிறப்பு பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் என அழைக்கப்படும் இவர்கள் திருச்சி மாவட்டத்தில் சுமார் 70 பேர் பணியாற்றி வருகிறார்கள்.
கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கும் இதே உத்தரவுதான் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டுமென வாய்மொழியாக உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்கள் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவர் சேதுராமன் தலைமையில் நேற்று திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு உத்தரவுப்படி பள்ளிக்கு வர வேண்டியதில்லை என அவர்களுக்கு எடுத்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.

Next Story