திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி; தடை செய்யப்பட்ட பகுதியாக 2 கிராமங்கள் அறிவிப்பு


திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி; தடை செய்யப்பட்ட பகுதியாக 2 கிராமங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 May 2021 8:09 PM GMT (Updated: 4 May 2021 8:09 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். தடை செய்யப்பட்ட பகுதியாக 2 கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கல்லக்குடி, மே.5-
திருச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். தடை செய்யப்பட்ட பகுதியாக 2 கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் 4 பேர் பலி
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. 
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா நோயாளிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்து உள்ளது. 
2 கிராமங்களுக்கு தடை
மாவட்டத்தில் தற்போது 3,410 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே புள்ளம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவாண்டாகுறிச்சி, விரகாலூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கல்லக்குடி மற்றும் புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் வடுகர்பேட்டை கிராமத்தில் 8 பேரும், விரகாலூர் கிராமத்தில் 7 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. 
அவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில், அந்த கிராமங்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
போலீஸ் பாதுகாப்பு
இதனால் அந்த கிராமங்களுக்கு வெளியில் இருந்து யாரும் செல்லக்கூடாது என்பதற்காக, அந்த கிராமங்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் இரும்பு தகரம் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. 
அத்துடன் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன. மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் 3 பேருக்கும், ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சியில் ஒருவருக்கும், பிடாரமங்கலம் கிராமத்தில் ஒருவருக்கும் என்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story