மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பகுதியில் குவிந்த பொதுமக்கள்- வாகனங்கள் + "||" + Public vehicles congested in restricted area

தடை செய்யப்பட்ட பகுதியில் குவிந்த பொதுமக்கள்- வாகனங்கள்

தடை செய்யப்பட்ட பகுதியில் குவிந்த பொதுமக்கள்- வாகனங்கள்
ஜெயங்கொண்டத்தில், கொரோனா தொற்றால் தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:

தடை செய்யப்பட்ட பகுதி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 85 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கடந்த மாதம் 28-ந்தேதி சன்னதி தெருவில் சிட்டி யூனியன் வங்கி மேலாளர் ஒருவருக்கும், அதே தெருவில் வசிக்கும் ஆடிட்டர் ஒருவருக்கும் என 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அந்த தெருவில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களுக்கு வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 1-ந் தேதி முதல் 14 நாட்களுக்கு அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்து, அறிவிப்பு பலகை மற்றும் தடுப்புகள் வைத்து அடைத்தனர்.
ஏராளமான வாகனங்கள்
மேலும் வங்கிகளின் சேவையை ஆன்லைன் மூலம் செய்யவும், குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மட்டுமே வங்கிகளுக்கு உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும், வங்கிகளுக்கு உள்ளே கிருமிநாசினி தெளிப்பது, வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி கொடுப்பது, முககவசம் அணிந்து குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்கவும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதனை வங்கி நிர்வாகம் முறையாக கடைபிடித்து வந்தது.
இந்நிலையில் திடீரென நேற்று காலை தடுப்புகளை மீறி ஏராளமான இருசக்கர வாகனங்கள் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள வங்கிகளுக்கு முன்னால் நின்றன. மேலும் கூட்டமாகவும் காணப்பட்டது. வாகனப் பெருக்கமும் அதிகரித்திருந்தது. இதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக கூறி நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின்படி, சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.
வெறிச்சோடியது
பின்னர் நான்கு திசைகளிலும் உள்ள தடுப்புகளை பலப்படுத்தினர். மேலும் வங்கி ஊழியர்களிடம் மத்திய, மாநில அரசுகளின் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவும், அவற்றை வாடிக்கையாளர்களும் கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர் மூலம் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளுக்கு உள்ளேயும், வெளியேயும், ஏ.டி.எம். மையங்கள் உள்ளேயும், மையங்களுக்கு வெளியிலும், கதவு கைப்பிடிகளிலும் மற்றும் தெரு, சாலை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் வாகனங்கள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.