ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 585 பேருக்கு கொரோனா; முதியவர் சாவு


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 585 பேருக்கு கொரோனா; முதியவர் சாவு
x
தினத்தந்தி 4 May 2021 10:24 PM GMT (Updated: 4 May 2021 10:24 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 585 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், முதியவர் ஒருவர் பலியானார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 585 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், முதியவர் ஒருவர் பலியானார்.
கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் புதிதாக 652 பேருக்கு தொற்று உறுதியானது ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக உள்ளது.
நேற்றும் ஒரே நாளில் 585 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 388 ஆக உயர்ந்தது. இதில் மொத்தம் 19 ஆயிரத்து 802 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். 571 பேர் நேற்று மட்டும் குணமடைந்தார்கள். மேலும் கொரோனாவுக்கு தற்போது 3 ஆயிரத்து 419 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முதியவர் பலி
இந்தநிலையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலியாகி உள்ளார். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் கடந்த 1-ந் தேதி இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 167 ஆக உயர்ந்தது.
ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நோய் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
கால்நடை ஆஸ்பத்திரி மூடல்
இதற்கிடையே ஈரோடு ஸ்டேட் வங்கி வீதியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியின் வளாகத்தில் செயல்படும் கால்நடைத்துறை இணை இயக்குனர் அலுவலக பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேலும், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது.
இதேபோல் அதே பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வரும் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வங்கியும் நேற்று மூடப்பட்டது. வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் பணபரிவர்த்தனை செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.

Next Story