மாவட்ட செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில்ஆம்புலன்சில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; 3 பேர் பலிஆக்சிஜனுடன் படுக்கை வசதி இல்லாததால் பரிதாபம் + "||" + Treatment of corona patients in the ambulance 3 killed

சேலம் அரசு ஆஸ்பத்திரியில்ஆம்புலன்சில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; 3 பேர் பலிஆக்சிஜனுடன் படுக்கை வசதி இல்லாததால் பரிதாபம்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில்ஆம்புலன்சில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; 3 பேர் பலிஆக்சிஜனுடன் படுக்கை வசதி இல்லாததால் பரிதாபம்
ஆம்புலன்சில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை 3 பேர் பலி
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுடன் படுக்கை வசதி இல்லாததால்  கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ்
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 549 பேர் கொரோனா வைரஸ் பாதித்து பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.
800 படுக்கைகள்
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 607 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் சேலத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் பல தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் பலருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 
இதையொட்டி மேல் சிகிச்சைக்காக 15-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் நேற்று அந்தந்த தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.  சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கையிலும் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. 
3 பேர் பலி
தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து வரப்பட்ட கொரோனா நோயாளிகள் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் முருகேசன் கூறியதாவது:-
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் 800 படுக்கைகள் தயார் செய்யப்பட்டன. தற்போது அனைத்திலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆனால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிதான் குறைவாக உள்ளது. 
மேலும் 200 படுக்கை வசதிகள்
தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா பாதித்தவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம். ஆனாலும் சில தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஆம்புலன்சில் வைத்தே முடிந்த அளவு சிகிச்சை அளித்து வருகிறோம். இருப்பினும் கொரோனா நோயாளிகளின் உயிர் இழப்பு கைமீறி போகிறது. 
இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மேலும் 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணி முடிவடையும் என்று கூறினார்.