நங்கவள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


நங்கவள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2021 10:42 PM GMT (Updated: 4 May 2021 10:42 PM GMT)

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மேச்சேரி:
நங்கவள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுப்பெண்
நங்கவள்ளி அருகே குட்டப்பட்டி ஊராட்சி தண்ணீர் குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், நங்கவள்ளி அருகே கரட்டுப்பட்டி மேல்தெரு பகுதியை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் மகள் குமுதா (வயது 29) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அருண்குமாருக்கும், குமுதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. மேலும் அருண்குமார், குமுதாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து குமுதா தனது பெற்றோரிடம் போன் மூலம் கூறியுள்ளார். பெற்றோர் இரவு நேரம் என்பதால் காலையில் வந்து பேசுகிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே குமுதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை குமுதாவின் தந்தைக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் போன் செய்து உங்கள், மகள் வீட்டில் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நங்கவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது, குமுதா,  மின் விசிறியில், சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாவில் சந்தேகம்
இதனிடையே குமுதாவின் தந்தை லட்சுமி நரசிம்மன் நங்கவள்ளி போலீசில் கொடுத்த புகாரில், என் மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. அவளது சாவுக்கு, அவரது கணவர் அருண்குமார் தான் காரணம். எனவே இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை பிடித்துவிசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அமுதாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story