சேலத்தில் ெ்காரோனா விதிமுறைகள் மீறல்: பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்


சேலத்தில் ெ்காரோனா விதிமுறைகள் மீறல்: பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 4 May 2021 10:43 PM GMT (Updated: 4 May 2021 10:43 PM GMT)

பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சேலம்:
சேலத்தில் கொரோனா விதிமுறைகள் மீறியதாக பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
பல்பொருள் விற்பனை அங்காடிகள்
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் கண்காணிக்க குழுக்கள் அமைத்து ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அஸ்தம்பட்டி உதவி ஆணையாளர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் செரிரோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த தனியார் பல்பொருள் விற்பனை அங்காடிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் 2 தனியார் பல்பொருள் விற்பனை அங்காடிகள் மற்றும் ஓட்டலுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
செல்போன் விற்பனை நிலையம்
சூரமங்கலம் உதவி ஆணையாளர் ராம்மோகன், உதவி ஆணையாளர் (வருவாய்) சாந்தி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் மெய்யனூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு முரணாக விற்பனை செய்த செல்போன் விற்பனை நிலையத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அம்மாபேட்டை உதவி ஆணையாளர் சண்முக வடிவேல் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, தேர்வீதி பகுதியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தாத வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முதல் அக்ரஹாரம் பகுதியில் 2 ஜவுளிக்கடை உள்பட 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அவைகளுக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டன.
ஆஸ்பத்திரிக்கு அபராதம்
கொண்டலாம்பட்டி பகுதியில் உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு தலைமையில் சுகாதார அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சீலநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று மருத்துவ கழிவுகளை சேகரம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்திடம் முறையாக ஒப்படைக்காமல் பிற குப்பை கழிவுகளுடன் மாநகராட்சி வாகனத்தில் ஏற்றியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சேலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story