கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை


கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 5 May 2021 6:01 PM GMT (Updated: 5 May 2021 6:01 PM GMT)

கணவரிடம் அவதூறாக கூறிய 2 வாலிபர்களே என் சாவுக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்ெகாலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

பரமக்குடி
கணவரிடம் அவதூறாக கூறிய 2 வாலிபர்களே என் சாவுக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்ெகாலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணமான இளம்பெண்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ்(வயது 33). ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை பார்த்து வருகிறார்.  இவருக்கும் ராமநாதபுரம் கொட்டகை கிராமத்தை சேர்ந்த ரேஷ்மா(25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும், 10 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளன. இந்தநிலையில் ரேஷ்மா வீட்டுக்கு, அதே ஊரை சேர்ந்த உறவினரான தென்னரசு(30) வந்து சென்றுள்ளார்.
தற்கொலை
இந்தநிலையில் ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்தபோதும் அவர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் (20), முத்துக்குமார்(30) ஆகியோர் ரேஷ்மாவின் கணவர் விமல்ராஜிடம் கூறியுள்ளனர். 
இதனால் விமல்ராஜ், ரேஷ்மாவை கண்டித்துள்ளார். இதைதொடர்ந்து ரேஷ்மா, தன்னை பற்றி கணவரிடம் அவதூறாக ஏன் கூறினீர்கள்? என முத்துக்குமார், பாலமுருகன், ஆகியோரிடம் செல்போனில் பேசி திட்டியுள்ளார். அதற்கு அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த ரேஷ்மா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
கடிதம்
இதற்கிடையே குழந்தைகளின் கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது ரேஷ்மா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரேஷ்மாவின் பிணத்தை மீட்டு, பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த வீட்டில் போலீசார் சோதனையிட்ட போது, ரேஷ்மா எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், “எனது சாவுக்கு பாலமுருகன், முத்துக்குமார் ஆகியோர்தான் காரணம்” என எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே பாலமுருகன், முத்துக்குமார் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள்,, “ரேஷ்மா எங்களிடம் போனில் பேசி, உங்களால்தான் எனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. எனவே எனது சாவுக்கு நீங்கள் 2 பேரும்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வேன் என தெரிவித்தார். நாங்கள் அப்போது இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் திருமணமாகி 4 ஆண்டுகளுக்குள் ரேஷ்மா தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக பரமக்குடி ஆர்.டி.ஓ. தங்கவேலுவும் விசாரணை நடத்தினார். அப்போது ரேஷ்மா தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனக்கூறி அவருடைய குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரேஷ்மாவின் இந்த விபரீத முடிவால் அவருடைய 2 குழந்தைகளும் தாயை இழந்து பரிதவிக்கின்றன.

Next Story