காரைக்குடியில், கொரோனா கட்டுப்பாடு தீவிரம்


காரைக்குடியில், கொரோனா கட்டுப்பாடு தீவிரம்
x
தினத்தந்தி 5 May 2021 7:27 PM GMT (Updated: 5 May 2021 7:27 PM GMT)

காரைக்குடி பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முககவசம் அணியாதவர்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.

காரைக்குடி, "

காரைக்குடி பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முககவசம் அணியாதவர்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பு

நாடு முழுவதும் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. காலை 6 மணியில் இருந்து பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் மட்டும் தான் செயல்படும். 12 மணி வரை டீக்கடை செயல்படலாம். ஓட்டல்களில் அரசு விதிமுறைகளின்படி பார்சல் சேவை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு இன்று அமல்படுத்தப்படுகிறது.

கட்டுப்பாடு தீவிரம்

காரைக்குடி பகுதியில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சுகாதாரத்துறையினர் நகரில் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளித்தனர். வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவ்வப்போது தங்கள் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த பணியில் தற்போது போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சாலைகளில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலிக்கின்றனர்.

அபராதம்

 இதுதவிர பொதுஇடங்களில் கூட்டமாக செல்பவர்களுக்கு அறிவுரை வழங்கியும், கடைகள், தேனீர் கடைகளில் கூட்டமாக நிற்பவர்களை எச்சரித்தும் அனுப்பி வைக்கின்றனர். காரைக்குடி புதிய பஸ் நிலையம், வாட்டர் டேங்க் பகுதி, கல்லூரி சாலை பகுதி, ஐந்து விலக்கு பகுதி, நூறடி சாலை, பெரியார் சிலை பகுதி, பழைய பஸ் நிலையம் பகுதி, கழனிவாசல் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து முக கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்தனர். ேபாலீசாரின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பலர் முககவசத்துடன் சாலைகளில் நடமாடியதை பார்க்க முடிந்தது.

Next Story