ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 May 2021 4:03 AM GMT (Updated: 6 May 2021 4:03 AM GMT)

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை, 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பிச்சாட்டூர், நாகலாபுரம், ராமகிரி, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது.

பிச்சாட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் போதெல்லாம் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கி விடுவதால் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் மற்றும் இதர பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.28 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு 2018-ம் ஆண்டு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தியதால் பாலம் அமைக்கும் பணிகள் 6 மாத காலம் வரை நடைபெறவில்லை. அதன் பிறகு பணிகள் தொடங்கப்பட்டதும் நிவர் புயல் காரணமாக பெய்த பலத்த மழைக்கு பிச்சாட்டூர் அணை முழுவதுமாக நிரம்பியது.

இதனை கருத்தில் கொண்டு உபரிநீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஊத்துக்கோட்டையில் உள்ள ஆரணி ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே 2 மாதம் வாகன போக்குவரத்து தடைபட்டது.

வெள்ளம் வடிந்த பின்னர் சீரமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் தற்போது வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்ச் மாதம் இறுதிக்குள் மேம்பால பணிகள் முடிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இன்னும் பணிகள் முடிவு பெறவில்லை. இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைய உள்ளது.

இந்த அரசாவது ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story