வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் இறக்குமதி சென்னை விமான நிலையத்தில் விரைவாக ‘டெலிவரி’ செய்ய நடவடிக்கை


வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் இறக்குமதி சென்னை விமான நிலையத்தில் விரைவாக ‘டெலிவரி’ செய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 6 May 2021 5:02 AM GMT (Updated: 6 May 2021 5:02 AM GMT)

வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் நேரடியாக தனியார் அமைப்புகள் சார்பில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த கருவிகளை விமான நிலையத்தில் இருந்து உடனடியாக ‘டெலிவரி’ செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ஆலந்தூர், 

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. 2-வது அலையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது ஆக்சிஜன் தட்டுப்பாடுதான். எனவே ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தநிலையில் பல்வேறு தனியார் அமைப்புகள் மற்றும் ஆஸ்பத்திரிகள், ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய தொடங்கி உள்ளன.

அதன்படி. இங்கிலாந்து, மலேசியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள், சரக்கு விமானங்களில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வர தொடங்கி உள்ளன.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த ஒரு சரக்கு விமானத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் 3 கருவிகள் சென்னையை சோ்ந்த ஒரு நிறுவனத்துக்கு வந்தன. அதேபோல் இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் இருந்து 38 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் தமிழகத்தில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு வந்தன.

சென்னை விமான நிலைய சரக்ககத்தில் சுங்கத்துறையினா் அவசர கால அடிப்படையில் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய இந்த பார்சல்களுக்கு முன்னுரிமை அளித்து சுமார் 30 நிமிடங்களில் சுங்க சோதனையை முடித்து ‘டெலிவரி’ செய்து வருகிறார்கள்.

இதுபோல் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பார்சல்களை காலதாமதம் செய்யாமல் உடனடியாக சுங்கச்சோதனை முடித்து ‘டெலிவரி’ கொடுக்க சுங்க இலாகா உயா் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் கொரோனா வைரஸ் முதல் அலையான கடந்த ஆண்டும் மருத்துவ உபகரணங்களான ‘வென்டிலேட்டா்’, முககவசம், சானிடைசா், ‘தொ்மல் ஸ்கேனா்’ போன்றவைகள் பெருமளவு வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் சென்னை வந்தன. அவைகளை உடனுக்குடன் சுங்க சோதனையிட்டு ‘டெலிவரி’ கொடுக்கப்பட்டன. இதற்காக இரவு-பகல் என 24 மணி நேரமும் சென்னை விமான நிலைய சரக்கக பகுதியில் சுங்க இலாகா அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் இதை கண்காணிக்க சுங்க இலாகா உயா் அதிகாரிகள் அடங்கிய தனி குழுவும் அமைக்கப்பட்டது. காலதாமதம் ஏற்பட்டால் புகார் அளிக்க தனி செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது.

அதேபோன்ற ஏற்பாட்டை தற்போதும் செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story